கென்யாவில் திருப்பலி ஊர்வலத்தில் ஆண், பெண் துறவிகள் கென்யாவில் திருப்பலி ஊர்வலத்தில் ஆண், பெண் துறவிகள் 

பிறரன்பு ஆதரவாளர்களுக்காக 23 நொடிகளுக்கு ஒருமுறை ஒரு திருப்பலி

கடந்த ஆண்டில் ACN அமைப்பின் நன்கொடையாளர்கள் அனுப்பிய நிதியுதவியால், உலக அளவில் 40,096 அருள்பணியாளர்கள் பலனடைந்துள்ளனர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகளாவிய கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு ஒன்றின் ஆதரவாளர்களின் கருத்துகளுக்காக, உலக அளவில், 23 நொடிகளுக்கு ஒருமுறை, ஒரு திருப்பலி நிறைவேற்றப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையில் இருப்போருக்கு உதவும் ACN எனப்படும் உலகளாவிய பிறரன்பு அமைப்பு, ஜூன் 17, இப்புதனன்று வெளியிட்டுள்ள, 2019ம் ஆண்டின் அறிக்கையில், தங்கள் கருத்துகளுக்காக திருப்பலிகள் நிறைவேற்றப்படுவதற்கென, கடந்த ஆண்டில், ஆதரவாளர்கள் அனுப்பிய நிதியை வைத்து, 13 இலட்சத்து 78 ஆயிரத்து 635 திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.

துன்புறும் அல்லது, அதிகம் உதவி தேவைப்படும் இடங்களிலுள்ள திருஅவையின் அருள்பணியாளர்களுக்கு உதவுவதற்கென, நன்கொடையாளர்கள் அனுப்பிய நிதியுதவியால், 40,096 அருள்பணியாளர்கள் பலனடைந்தனர் என்று, ACN அமைப்பு கூறியுள்ளது.

உலகிலுள்ள அருள்பணியாளர்களுள் ஏறத்தாழ பத்தில் ஒருவர் இந்த உதவியைப் பெற்றுள்ளனர் என்றும், உலக அளவில் கிடைக்கும் அனைத்து நன்கொடைகளிலும் திருப்பலிக்கென வழங்கப்படும் நிதி, ஏறத்தாழ 16 விழுக்காடு என்றும், ACN அமைப்பு கூறியுள்ளது.

மேலும், ACN உலகளாவிய அமைப்பின் 23 தேசிய அலுவலகங்கள், கடந்த ஆண்டில்,  139 நாடுகளில் 5,230 திட்டங்களுக்கு உதவியுள்ளன என்றும், இந்த உதவியால், உலகிலுள்ள மொத்த கத்தோலிக்க மறைமாவட்டங்களில், மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான,  அதாவது 1,162 மறைமாவட்டங்கள் பலனடைந்துள்ளன என்றும், அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ACN உலகளாவிய அமைப்பு வழங்கிய உதவி குறித்து ICN ஊடகத்திடம் பேசிய மத்திய ஆப்ரிக்க குடியரசின் Berberati ஆயர் Dennis Kofi Agbenyadzi அவர்கள், இந்த உதவி, தன் மறைமாவட்டத்தில் 19 கிராமப்புற பங்குத்தளங்களில் மறைப்பணியாற்றும் அருள்பணியாளர்களுக்குப் பேருதவியாக இருந்தது என்று கூறியுள்ளார். 

2019ம் ஆண்டில் ACN அமைப்பு பெற்ற திருப்பலி நன்கொடைகளில் ஏறத்தாழ 38 விழுக்காடு, ஆப்ரிக்காவிற்கு அனுப்பப்பட்டது என்றும், உதவித் திட்டங்களுக்கென அந்த அமைப்பு பெற்ற நன்கொடைகளில் 29 விழுக்காட்டுக்கும் அதிகமான திட்டங்கள் ஆப்ரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. 

கோவிட்-19 நெருக்கடி காலத்தில், திருப்பலிகள் நிறைவேற்றப்படுவதற்கென வழங்கப்படும் நன்கொடைகள் வழியாக, அருள்பணியாளர்களுக்கு உதவி வருகிறது, ACN அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2020, 13:30