எல் சால்வதோர் நாட்டு சிறைச்சாலை எல் சால்வதோர் நாட்டு சிறைச்சாலை 

குடிமக்கள் அனைவருக்கும் மாண்புநிறைந்த வாழ்வு அவசியம்

"மனித வாழ்வைவிட வேறு எதுவும் எனக்கு முக்கியம் அல்ல" என்பது, புனித ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் போதனையின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்திருந்தது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் இறைமக்கள் அனைவருடனும், தங்களின் அருகாமையை வெளிப்படுத்தும் வகையில், நம்பிக்கையூட்டும் செய்தியொன்றை வெளியிட்டுள்ளனர், எல் சால்வதோர் நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

மே 31, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கென செய்தி வெளியிட்டுள்ள எல் சால்வதோர் ஆயர்கள், தற்போது நாடு எதிர்கொள்ளும் தேசிய அளவிலான நெருக்கடியை எதிர்கொள்வதற்கு, பொறுப்புணர்வுடன் உரையாடலில் ஈடுபடுமாறு, அதிகாரிகளை ஊக்குவித்துள்ளனர்.

"மனித வாழ்வைவிட வேறு எதுவும் எனக்கு முக்கியம் அல்ல" என்பது, புனித ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் போதனையின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்திருந்தது   என்பதை, தங்கள் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், மனித வாழ்வை ஆதரிப்பது, திருஅவையின் முக்கியப்பணி என்றும் கூறியுள்ளனர்.

எல் சால்வதோர் நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலங்களில், மனித மாண்புக்கு எதிராக இடம்பெற்ற உரிமை மீறல்களையும், மனிதர், கடவுளோடும், சக மனிதர்களோடும் ஒப்புரவாக வேண்டும் என்ற இறைத்தந்தையின் திட்டத்தையும், ஆயர்கள், சோர்வின்றி எடுத்துரைத்து வந்தனர் என்பதையும் அச்செய்தி கூறுகிறது.

கொள்ளைநோயின் எதிர்மறை விளைவுகளை சந்தித்துவரும் நாட்டில், அரசிற்கு  தற்போது மிகவும் தேவைப்படுவது, குடிமக்கள் அனைவருக்கும் மாண்புநிறைந்த வாழ்வை வழங்கவேண்டியதாகும் என்று கூறியுள்ள ஆயர்கள், தேசிய வாழ்விலிருந்து எவரும் பறக்கணிக்கப்பட்டுவிடாமல் இருப்பதில் கவனம் செலுத்துமாறு, அரசு அதிகாரிகளையும், தனியார் நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகளைப் பராமரிக்கும், மருத்துவ மற்றும், நலவாழ்வுப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள எல் சால்வதோர் நாட்டு ஆயர்கள்,  கடும் வறுமையில் வாழ்வோர், வயது முதிர்ந்தோர் மற்றும், சிறார் மீது அக்கறை காட்டும் அனைவரையும் பாராட்டியுள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2020, 13:45