திருத்தந்தை புனித 6ம் பவுல் திருத்தந்தை புனித 6ம் பவுல்  

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-25

நவீன கலாச்சாரம், ஆன்மீக கோட்பாடுகளின் மீது எழுப்பப்பட வேண்டும். ஏனெனில், அவையே, அக்கலாச்சாரத்தைத் தாங்கிப் பிடிக்கத் தூண்டுதலாக உள்ளன - புனித திருத்தந்தை 6ம் பவுல்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை புனித 6ம் பவுல்-7

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற சில மாதங்களிலேயே 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை மீண்டும் தொடங்கினார். திருப்பீட தலைமையகத்தில் மாற்றங்களைக் கொணர்ந்தார். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திருத்தந்தை 23ம் ஜான் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்ட விதிமுறையை 1968ம் ஆண்டு மார்ச் மாதம், முதல் தேதி அறிவித்தார். மார்ச் 28ம் தேதி, வெளியிட்ட Pontificalis Domus எனப்படும் திருத்தூது அறிவுரை மடல் மற்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில், பல்வேறு திருத்தூது அறிவுரை மடல்களை வெளியிட்டு, திருப்பீட தலைமையகத்தில் நிலவிய நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் குறைத்தார். தலைமையகத்தில், இத்தாலியரல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தார். பல்வேறு திருப்பீடத் துறைகளின் பணிகள் துரிதமாக நடைபெறச் செய்தார். திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1966ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, அவர் உலகின் அனைத்து ஆயர்களுக்கும் அனுப்பிய மடலில், ஆயர்கள் தங்களின் 75வது வயதில், பணி ஓய்வை, திருத்தந்தைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். ஆயினும், அவர்கள், தங்களின் பணி ஓய்வை, சொந்த விருப்பத்தின்பேரில், உண்மையாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதே மாதிரியான கோரிக்கையை, 1970ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, Ingravescentem aetatem அதாவது "முதிர் வயதை நோக்கி (advancing age)" என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் motu proprio என்ற அறிக்கை வழியாக அனைத்து கர்தினால்களுக்கும் முன்வைத்தார். எண்பது வயதைக் கடக்காத கர்தினால்கள் மட்டும், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் எனப்படும் கர்தினால்கள் அவையில் பங்குபெறலாம் என்று கூறினார். அத்தகைய கர்தினால்கள், “தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய கர்தினால்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

கர்தினால்களின் பணி ஓய்வு

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கொண்டுவந்த இந்த பணி ஓய்வு திட்டம், பல்வேறு பதவிகளை, இளம் அருள்பணியாளர்கள் ஏற்கவும், திருப்பீட தலைமையகத்திலும்,  அடுத்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையிலும் இத்தாலியர்களின் ஆதிக்கம் குறையவும் வழியமைத்தது. கான்கிளேவ் அவையில் பங்குபெறும் கர்தினால்களின் அதிகபட்ச எண்ணிக்கை 120 எனவும் வரையறுத்தார் அவர். அச்சமயத்தில், இந்த பணி ஓய்வு விதிமுறை, திருத்தந்தைக்கு கிடையாதா, திருத்தந்தையும் தனது எண்பதாவது வயதில் ஓய்வு பெறுவாரா என்று, சிலர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்கை 6ம் பவுல் அவர்கள், "அரசர்கள் அரசுரிமையைத் துறக்கலாம், அது திருத்தந்தையர்களால் இயலாது" என்று கூறியதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், தனது எண்பதாவது வயதில், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி இறைபதம் சேர்ந்தார். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவையின் ஏறத்தாழ 600 ஆண்டுகால வரலாற்றில், முதன் முறையாக, 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, தானாகவே பணி ஓய்வை அறிவித்து, தற்போது வத்திக்கானில் செபத்தில் தன் வாழ்வைச் செலவிட்டு வருகிறார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குமுன், திருஅவையில் 1294ம் ஆண்டில், திருத்தந்தை 5ம் செலஸ்தின் அவர்களும், 1415ம் ஆண்டில், திருத்தந்தை 12ம் கிரகரி அவர்களும் பணி ஓய்வை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

திருவழிபாடு

திருத்தந்தை12ம் பயஸ் அவர்கள், Mediator Dei என்ற தன் திருமடல் வழியாக, கத்தோலிக்கத் திருவழிபாடுகள், இலத்தீன் மொழியில் நடைபெறவேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தினார். திருமுழுக்கு அருளடையாளம், அடக்கச் சடங்குகள், மற்றும், ஏனைய நிகழ்வுகளில் மண்டல மொழிகள் பயன்படுத்தப்பட அனுமதி வழங்கினார். அவர், 1951 மற்றும், 1955ம் ஆண்டுகளில், கிறிஸ்து உயிர்ப்பு திருவழிபாடுகளில், குறிப்பாக, புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி திருவழிபாடுகளில் மாற்றம் கொணர்ந்தார். 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் (1962–1965),  வெளியிட்ட Sacrosanctum Concilium என்ற திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கத்தில், இலத்தீன் வழிபாட்டுமுறையில் பொதுவான சீர்திருத்தங்களுக்கு, சில பொதுவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. திருவழிபாடுகளில் மண்டல மொழிகள் பயன்படுத்தப்படுவது குறித்து ஆயர் பேரவைகள் தீர்மானிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1964,1967,1968,1969 மற்றும், 1970ம் ஆண்டுகளில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் திருவழிபாடுகளில் சீர்திருத்தங்கள் இடம்பெற அறிவுரைகளை வெளியிட்டார். 

உறவுகளும் உரையாடல்களும்

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அனைத்து மனித சமுதாயத்துடன் உறவுகளை உருவாக்குவதிலும், உரையாடல் நடத்துவதிலும் ஆர்வம் காட்டினார். உரையாடல்கள், அதில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வில் இடம்பெற வேண்டுமென்று இவர் விரும்பினார். 1964ம் ஆண்டில், கிறிஸ்தவரல்லாதவர்க்கு, திருப்பீடத்தில் ஒரு செயலகத்தை உருவாக்கினார். இது பின்னாளில், திருப்பீட பல்சமய உரையாடல் அவை என்று பெயரிடப்பட்டது. 1965ம் ஆண்டில், மத நம்பிக்கையற்றவர்களுடன் உரையாடல் நடத்துவதற்கென ஒரு செயலகத்தைத் தொடங்கினார். இச்செயலகம், 1993ம் ஆண்டில், திருப்பீட கலாச்சார அவையுடன் இணைக்கப்பட்டது. திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1971ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி மற்றும், இயற்கைப் பேரிடர் இடர்துடைப்புக்கென, பாப்பிறை அலுவலகம் ஒன்றைத் தொடங்கினார். நன்மனம் கொண்ட எல்லாருடனும் நல்லுறவை வளர்க்கும் நோக்கத்தில், உலக அமைதி நாளை உருவாக்கினார் திருத்தந்தை 6ம் பவுல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2020, 14:36