தென் கொரிய கர்தினால் Andrew Yeom Soo-jung தென் கொரிய கர்தினால் Andrew Yeom Soo-jung  

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ செபம்

தென் மற்றும், வட கொரிய நாடுகளின் வருங்காலத்திற்கு, இவ்விரு நாடுகளும், உலகளாவிய சமுதாயமும் பொறுப்பு – தென் கொரிய கர்தினால் Yeom

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரியத் தீபகற்பத்தில் ஒப்புரவும் அமைதியும் நிலவ கடுமையாக முயற்சித்துவரும் கத்தோலிக்கத் திருஅவைக்கு, செபமே மிகவும் வல்லமை மிக்க ஆயுதம் என்று, தென் கொரிய கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் கூறினார்.

கொரியத் தீபகற்பத்தில் போர் தொடங்கியதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு,  ஜூன் 25, இவ்வியாழனன்று, Seoul பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் Yeom அவர்கள், மன்னிப்புக் கலாச்சாரத்தை உருவாக்குவதன் வழியாக, நீதி, அதிக மனிதம் நிறைந்ததாக மாறும் மற்றும், அமைதி, நிரந்தரமானதாக அமையும் என்று  கூறினார்.

தென் மற்றும், வட கொரிய நாடுகளின் வருங்காலத்திற்கு, இவ்விரு நாடுகளும், உலகளாவிய சமுதாயமும் பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டிய, Seoul பேராயராகிய கர்தினால் Yeom அவர்கள், இரு கொரிய நாடுகளின் உண்மையான, பொதுவான நலனுக்காக, இந்நாடுகளின் தலைவர்கள் உழைக்குமாறு அழைப்பு விடுத்து, அக்கருத்துக்காகச் செபித்தார்.

1950ம் ஆண்டு முதல், 1953ம் ஆண்டு வரை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதரவுடன் தென் கொரியாவும், சீனா, இரஷ்யா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் வட கொரியாவும் போரிட்டன. இந்தப் போரில், கொரிய தீபகற்பத்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ பத்து விழுக்காட்டினர் உயிரிழந்தனர். அமெரிக்க ஐக்கிய நாடு மட்டும் 33,686 உயிரிழப்புகளை எதிர்கொண்டது.   

இந்த எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தென் கொரியாவில் கத்தோலிக்கர், ஜூன் 25, இவ்வியாழன் வரை நவநாள் பக்திமுயற்சிகளை மேற்கொண்டனர். தலத்திருஅவையும், 1965ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 25ம் தேதியை, கொரிய மக்கள் மத்தியில் ஒப்புரவும், ஒன்றிப்பும் நிலவச் செபிக்கும் நாளாக கடைப்பிடித்து வருகிறது.

தென் கொரியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு அதிகரித்துள்ளது மற்றும், தற்போது அந்நாட்டில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 58 இலட்சமாகும்.

மேலும், கொரியப் போருக்குப்பின் தென் கொரியா, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுவரும் அதேவேளை, வட கொரியா, உலகில் மனித உரிமை மீறல்கள் அதிகம் இடம்பெறும் நாடுகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (CNA) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2020, 14:38