கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்  

ஆன்மீகத்தில் வளருங்கள், நூல்களை வாசியுங்கள்

மதம் சார்ந்த கூட்டங்கள் இடம்பெறுவதற்கு அனுமதி கிடைப்பதற்கு மேலும் காலஅளவு நீடிக்கப்படக்கூடும் என்ற நிலையில், இக்காலத்தில் அருள்பணியாளர்கள் ஆழமான ஆன்மீகத்திலும், அறிவிலும் வளருங்கள் - கர்தினால் கிரேசியஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பரவல் நெருக்கடி காலத்தின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளவேளை, இந்த சமுதாய ஊரடங்கு காலம், மேலும் நீட்டிக்கப்படும் நிலைக்குத் தயாராக இருங்கள் என்று, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், அருள்பணியாளர்களிடம் கூறியுள்ளார்.

யூடியூப் காணொளி வழியாக தனது உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் பேசியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தக் காலத்தின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும்கூட, ஆலயங்கள் மூடப்பட்டிருக்கும் காலம் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கு அருள்பணியாளர்கள் தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதம் சார்ந்த கூட்டங்கள் இடம்பெறுவதற்குரிய அனுமதி கிடைப்பதற்கு மேலும் காலஅளவு நீட்டிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தக் காலத்தில் நூல்களை அதிகம் வாசியுங்கள், ஆழமான ஆன்மீகத்திலும், அறிவிலும் வளருங்கள், உடல்நலத்தைக் கவனித்துக கொள்ளுங்கள் என்று அருள்பணியாளர்களிடம் கூறியுள்ளார். (YouTube)

மியான்மார் திருவழிபாடு

மேலும், கோவிட்-19 சார்ந்த விதிமுறைகளால், மியான்மார் நாட்டில், இம்மாதம் 15ம் தேதி வரை, அன்றாடத் திருப்பலிகள், ஞாயிறு திருப்பலிகள், மற்றும், ஏனைய திருவழிபாடுகள் ஆலயங்களில் நடைபெறாது என்றும், விசுவாசிகள் இணையதளம் வழியாக திருப்பலி காணுமாறும், இந்த சமுதாய விலகல் காலத்தில், திருவிவிலியத்தை அதிகம் வாசிக்குமாறும் அந்நாட்டுத் திருஅவைத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். (UCAN)

சுற்றுச்சூழலில் மாசு குறைவு

இதற்கிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அவற்றின் கழிவுகளின் வெளியேற்ற அளவும் குறைந்தது மற்றும், நீர் நிலைகள் தூய்மையடைந்தன. கங்கை நீர் தெளிவாகியுள்ளது. இதேபோன்று வாகன போக்குவரத்தும் பெருமளவில் குறைந்துள்ளன. காற்றில் கலந்த நச்சு வாயுக்களின் அளவும் குறைந்துள்ளது.

இமாச்சல பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் இருந்து ஏறத்தாழ 213 கி.மீ. தொலைவிலுள்ள இமய மலையின் பனியால் சூழப்பட்ட, தவுலதார் மலைத்தொடர், கடந்த சில நாட்களுக்குமுன் தெரிந்தது. இவ்வாறு, ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த பனிமலை தெரிந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2020, 14:51