அன்னை மரியா, புதிய உடன்படிக்கையின் பேழை அன்னை மரியா, புதிய உடன்படிக்கையின் பேழை  

நேர்காணல் – அன்னை மரியா: புதிய உடன்படிக்கையின் பேழை

அன்னை மரியாவை “புதிய உடன்படிக்கைப் பேழையே” என்று அழைப்பது உண்மையிலேயே மீட்பு வரலாற்றில், அந்த அன்னைக்கான பிரிக்கமுடியாத பங்கையும், கிறிஸ்தவர்களாகிய நாம் அவளுடைய பரிந்துரையையும் துணையையும் ஏன் தேட வேண்டும் என்பதையும், தெளிவாக விளக்குகின்றது.

மேரி தெரேசா: வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவை, அன்னை மரியாவுக்கு பல ஆயிரம் பெயர்கள் சூட்டி மகிழ்கின்றது. அன்னை மரியாவின் வாழ்வை வியந்து நோக்கி, வியப்புக்குரிய அன்னையே, விடியற்கால விண்மீனே, கன்னியர்களின் ஆரமே, கைம்பெண்களின் ஆதரவே, ஞானத்தின் இருப்பிடமே, தர்மத்தின் கண்ணாடியே.. இவ்வாறு, அவரை போற்றிப் புகழ்ந்து அவரின் பரிந்துரையை வேண்டுகிறோம். மரியின் ஊழியர் சபையின் அருள்பணி அமல்ராஜ் அவர்கள், அன்னை மரியா, புதிய உடன்படிக்கையின் பேழையாக எவ்வாறு போற்றப்படுகிறார்  என்பது பற்றி இன்று நமக்கு விளக்குகிறார்.

நேர்காணல் – அன்னை மரியா: புதிய உடன்படிக்கையின் பேழை

அருட்தந்தை அமல்ராஜ் O.S.M.

மரியாள்: புதிய உடன்படிக்கையின் பெட்டகம்

1. “வாக்குத்தத்தத்தின் பெட்டகமே”: பொருளும் விளக்கமும்

மரியாளின் மன்றாட்டு மாலையில “வாக்குத்தத்தத்தின் பெட்டகமே” எனறு அன்னை மரியாளை நாம் அழைத்து வேண்டுகின்றோம். இதன் பொருள் கன்னி மரியாள் “புதிய உடன்படிக்கையின் பேழை” என்பதாகும். இது மிகவும் ஆழமானதொரு விவிலிய மற்றும் மரியியல் விளக்கத்தைக் கொண்டதாகும். மேலும், இது இறைவனுடைய மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாளுடைய பிரிக்கமுடியாததொரு பங்கை விளக்குவதாகவும் உள்ளது. உடன்படிக்கைப் பேழை என்பது, பழைய ஏற்பாடடில் வரும் ஒன்று. அன்னை மரியாளுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். இதைப்பற்றி உங்களுக்கு விளக்குவதற்கு முன்பு ஒன்றைமட்டும் உங்களுக்கு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன். விவிலியத்தை நீங்கள் எப்பொழுது வாசித்தாலும் அதைச் சரியாகப் புரிந்துகொள்ள இப்பொழுது நான் சொல்லப்போவது நிச்சயமாக உங்களுக்கு உதவும். அதாவது, பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் தனித்தனியாகப் பிரித்து வாசிக்காமல், அவைகளை ஒன்றாக இணைத்தே வாசிக்கவேண்டும். ஏனெனில், “புதிய ஏற்பாடானது பழைய ஏற்பாட்டில் மறைந்துள்ளது: பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்படுகிறது” (Quaestionum in Heptateuchum libri septem 2,73: PL34,623). என்று புனித அகுஸ்தினார் கூறுகின்றார்.

இதனடிப்படையில், புதிய ஏற்பாட்டு மரியாவைப் பழைய ஏற்பாட்டில் வரும் உடன்படிக்கைப் பேழையோடு பொருத்திப் பார்த்து, அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்கின்றபொழுது அது நம்முடைய மரியன்னை பக்தியை மேலும் வளர்க்க உதவும். இந்த நோக்கத்தோடு, பழைய ஏற்பாட்டில் வரும் உடன்படிக்கைப் பேழைக்கும் அன்னை மரியாளுக்கும் எத்தகைய தொடர்புகள் உள்ளன என்பது பற்றி இப்பொழுது பார்ப்போம்.

பத்துக் கட்டளைகள் யூதர்களுடைய சமய மற்றும் சமூக வாழ்வில் மிக முக்கியமானதொன்றாகும். ஏனெனில், கடவுள் தம் மக்களை அன்புசெய்து, அவர்களோடு வாழ ஆசைப்படுகின்றார். ஆகவே, “நான் அவர்கள் நடுவில் தங்குவதற்கென ஒரு தூயகம் அமைக்கப்படட்டும்”(வி.ப.25:8) என்று சொல்லி, ஒரு பெட்டகத்தைச் செய்யுமாறு மோசேயிடம் கூறுகின்றார். ஏனெனில், அதுதான் கடவுள் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் அடையாளம். அதனுடைய பிரசன்னத்தைக் கடவுள் தங்களோடு இருப்பதன் அடையாளமாக (வி.ப.25:21-22) அவர்கள் கருதினர். எனவே, கடவுள் கட்டளையிட்டவாறு இஸ்ராயேல் மக்கள் ஓர் உடன்படிக்கைப் பேழையை அமைத்து அதை அலங்கரிக்க, “மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று” (வி.பி.40:34) என்று விடுதலைப் பயண நூல் விவரிக்கின்றது. இங்கு “ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று” என்று கூறுகையில், நிரப்பியது என்பதற்கு கிரேக்க விவிலியப் பதிப்பில் “episkiasei” (επισκιάσει) என்ற கிரேக்கச் சொல்லானது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே கிரேக்க வார்த்தைதான் புதிய ஏற்பாட்டில் வானதூதர் கபிரியேல் மரியாவிடம், “தூய ஆவி உம்மீது வரும் உன்னதக் கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்” (லூக்.1:35) என்று கூறும்போதும் பயன்படுத்தப்பட்டதாக விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வாறாக, உடன்படிக்கையின் நிறைவாகவும் திருச்சட்டத்தின் நிறைவாகவும் அன்னை மரியாளின் திருவயிற்றில் நம் மீட்பராம் இயேசு மனிதனாகக் கருத்தரித்தார். இதன் காரணமாகவே அன்னை மரியாளை, “வாக்குத்தத்தத்தின் பெட்டகமே” என்றுகூறி வாழ்த்துகின்றோம்.

2. தாவீது அரசர் உடன்படிக்கைப் பேழையைச் சந்தித்து வரவேற்றதற்கும் எலிசபெத்து - கன்னி மரியாளைச் சந்தித்ததற்கும் உள்ள ஒப்புமைகள்

மோசேயுடைய இறப்பிற்குப் பிறகு, யோசுவா இஸ்ராயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்கு நடத்திச் செல்கின்றார். அவர் சிலோவாவிலே ஒரு பேழையை அமைத்தார். அது அங்கே கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் இருந்தன. ஆனால், பெலிஸ்தியர்கள் இஸ்ராயேல் மக்களைப் போரில் வெற்றிகொண்டபொழுது அவர்கள் அந்தப் பேழையைத் திருடிக் கொண்டுபோய் விட்டார்கள். அங்கே அது ஏழு மாதம் இருந்தது. (1சாமு.5:1– 6:12). அது அங்கே இருந்தபொழுது அதன்பொருட்டு பெலிஸ்தியர்கள் பல துன்பங்களை அனுபவித்தார்கள். எனவே, அதை மீண்டும் இருந்த இடத்திற்கே திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இவ்வாறாக, உடன்படிக்கைப் பெட்டகமானது யூதேயா நாட்டை அடைந்தபொழுது தாவீது அரசர் முப்பதாயிரம் பேரைத் திரட்டிக்கொண்டு அதை வரவேற்கச் செல்கின்றார் (2சாமு..6:1–2). அவர்கள் அதைப் பவனியாகக் கொண்டுவந்தபொழுது, பாவியாகிய ஊசா அப்பேழையைத் தொட, ஆண்டவரின் சினத்தினால் அவன் அங்கேயே இறந்தான் ((2சாமு.6:7).

எனவே, அரசர் தாவீது, தன்னுடைய பாவ நிலையை எண்ணி,  “இத்தகைய ஆண்டவரின் பேழையை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்வேன்?” (2சாமு.6:9). என்று கூறி, அப்பேழையை யூதேயாவிலுள்ள ஓபோதுவில் விட்டுவிட்டு தன் இல்லம் திரும்புகின்றார். எனவே, அப்பேழை அங்கே மூன்று மாதங்கள் தங்கி இருந்தன (2சாமு.6:11). அப்பொழுது, ஓபோது மக்களுக்கு அதன்பொருட்டு நிறைவான ஆசிர்வாதம் கிடைத்தது. அதன்பிறகு, “ஆண்டவரின் பேழையை முன்னிட்டு ஓபோதுவில் ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார்” (2சாமு.6:12). அப்போது “தாவீது தாவது தம் முழுவலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். தாவீதும் இஸ்ராயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும், எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேவையைக் கொண்டுவந்தார்கள்” (2சாமு.6:14–15) என்று பழைய ஏற்பாட்டில் வாசிக்கின்றோம். இந்நிகழ்வுகள் அனைத்தையும் மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்திக்கச் சென்றதன் பின்னணியில் லூக்கா நற்செய்தி 1,39–45 வரை உள்ள பகுதியை வாசிக்கின்றபொழுது, மரியாளை நாம் ஏன் புதிய உடன்படிக்கையின் பெட்டகம் என்று சொல்லுகின்றோம் என்பது இன்னும் நமக்குத் தெளிவாக விளங்கும்.

முதலாவதாக,   “அதன்பின் மரியா புறப்பட்டு யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்” (லூக் 1, 39). என்று லூக்கா விவரிக்கின்றார். அதாவது உடன்படிக்கைப் பேழை மற்றும் மரியா இருவருமே யூதேயாவை நோக்கிப் பயணிக்கின்றனர்.

இரண்டாவதாக, தன்னுடைய பாவ நிலையை என்னி தாவீது, “இத்தகைய ஆண்டவரின் பேழையை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்வேன்?” (2சாமு.6:9). என்று கூறுகின்றார். அதேபோலவே, எலிசபெத்தும், “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (லூக் 1, 43) என்று வியந்து நிற்கின்றார்.

மூன்றாவதாக, உடன்படிக்கைப் பேழையை தாவீது நெருங்கியபொழுது அதை வரவேற்கும் பொருட்டு, “தாவீது தம் முழுவலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார்” என்று வாசிக்கின்றோம். அதே போன்று, “உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று”   (லூக்.1, 44) என்று மரியாளைக் கண்ட எலிசபெத்தின் வயிற்றில் இருந்த திருமுழுக்கு யோவானின் மகிழ்ச்சியை நற்செய்தியாளர் லூக்கா விவரிக்கின்றார்.

நான்காவதாக, உடன்படிக்கைப் பேழையானது ஓபோதுவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து அம்மக்களுக்கு ஆசி வழங்கியது. அதுபோலவே, மரியாளும் எலிசபெத்தின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கி இறைவனுடைய ஆசியை அவர்களுக்கு வழங்கினார்.

ஐந்தாவதாக,  “மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தம்மாளுடன் தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்” (லூக் 1, 56) என்று நற்செய்தியாளர் லூக்கா விவரிக்கின்றார். அதேபோல், “தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபோது ஏதோமிின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டுவந்தார்” (2சாமு.6:12) என்கின்றது பழைய ஏற்பாடு.

3. உடன்படிக்கைப் பேழையில் வைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் புதிய உடன்படிக்கையின் பெட்டகமான அன்னை மரியாளின் கருவில் உருவான இயேசு ஒப்பீடு

தாவீது அரசர் உடன்படிக்கைப் பேழையை வரவேற்கச் சென்று சந்தித்ததற்கும் அன்னை மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றதற்கும் இடையே இருந்த ஒற்றுமையை, அந்த உடன்படிக்கைப் பேழையில் வைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் புதிய உடன்படிக்கையின் பெட்டகமான அன்னை மரியாளின் திருவயிற்றில், அதாவது கருவில் உருவான இயேசுவோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இது இன்னும் தெளிவாக இருக்கும்.

முதலாவதாக, பழைய உடன்படிக்கைப் பேழையினுள் “மலையில் நெருப்பினின்று, உங்களுக்குக் கூறிய பத்துக்கட்டளைகளை முன்பு எழுதியது போலவே, ஆண்டவர் அப்பலகைகளில் எழுதினார். பின்னர் அவர் அவற்றை என்னிடம் கொடுத்தார். அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, நான் செய்திருந்த பேழையில் பலகைகளை வைத்தேன். ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி அவை அங்கே உள்ளன”  (இ.ச.10: 4–5) என்று மோசே கூறுகின்றார். அதேபோல மரியாளின் கருவில் பழைய ஏற்பாட்டுச் சட்டங்களின் நிறைவான வார்த்தையே மனுவுருவான இயேசு கருத்தரித்தார்.

இரண்டாவதாக,   “இப்பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும் உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன”(எபிரே.9,4) என்று எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலே கூறப்படுகின்றது. வானிலிருந்து இறங்கிவந்த வாழ்வுதருகின்ற மன்னாதான், மரியின் கருவில் உருவான இயேசு ஆவார்.

மூன்றாவதாக, “ஆரோனின் தளிர்த்த கோலும்” (எபிரே.9,4) அந்த உடன்படிக்கைப் பேழையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆரோனின் கோல் உண்மையான அரசரும், தலைமைக் குருவும், உலகின் மீட்பருமான கன்னிமரியின் கருவில் உருவான இயேசுவையே குறிக்கின்றது.

எவ்வளவு பொருத்தம் பார்த்தீர்களா! இத்தகைய மகத்துவமிக்க அந்த அன்னையை “வாக்குத்தத்தத்தின் பெட்டகமே” அதாவது “புதிய உடன்படிக்கைப் பேழையே” என்று அழைப்பது உண்மையிலேயே மீட்பு வரலாற்றில், அந்த அன்னைக்கான பிரிக்கமுடியாத பங்கையும், கிறிஸ்தவர்களாகிய நாம் அவளுடைய பரிந்துரையையும் துணையையும் ஏன் தேட வேண்டும் என்பதையும், தெளிவாக விளக்குகின்றது. எனவே, அன்னையின் வழியில் சென்று, அவர்தம் மகன் கிறிஸ்துவின் உயிருள்ள சாட்சிகளாய் வாழ முயல்வோம். அன்னையின் பரிந்துரையும் இறையாசீரும் என்றும் உங்களோடு இருப்பதாக. ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2020, 11:01