கொரோனா தொற்று நோய்  காலத்தில் காணொளி வழியாக திருப்பலி நிறைவேற்றும் இந்திய அருள்பணியாளர் கொரோனா தொற்று நோய் காலத்தில் காணொளி வழியாக திருப்பலி நிறைவேற்றும் இந்திய அருள்பணியாளர் 

கொள்ளை நோய்க்கெதிராக பல்சமய செபவழிபாடு

இந்த நெருக்கடியான நேரத்தில் சிறப்புப் பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரையும் சிறப்பான விதத்தில் நினைவுகூர்வோம் - கர்தினால் ஆலஞ்சேரி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய்க்கெதிராக, இணையதளம் வழியாக(online) பல்சமய செபவழிபாடு ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார், இந்திய தலத்திருஅவை தலைவர் ஒருவர்.

மனிதகுல ஒன்றிப்பிற்கும், கொரோனா தொற்றுக் கிருமிகளுக்கு எதிரான மருந்துகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவதற்குமென, சீரோ மலபார் வழிபாட்டுமுறை தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் மேற்கொண்ட இந்த முயற்சியில், இஞ்ஞாயிறன்று, இஸ்லாம் மற்றும், இந்து மதத்தலைவர்களும் இணையதளம் வழியாக பங்கேற்றனர்.

உலகில் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 இலட்சத்தையும், இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டரை இலட்சத்தையும் தாண்டிச் சென்றுள்ள நிலையில், மக்களைக் காப்பதற்கு இறைவனின் தலையீட்டை வேண்டி  பிற மததத்தலைவர்ளுடன் இணைந்து செபிக்க, இந்த ஏற்பாட்டை செய்திருந்தார், கர்தினால் ஆலஞ்சேரி .

இறை நம்பிக்கையுடையோர் அனைவரும் ஒன்றிணைந்து செபிக்கும்போது, இறைவனின் உதவி நிச்சயம் கிட்டும் என உரைத்த கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், இந்த நெருக்கடியான நேரத்தில் சிறப்புப் பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரையும் சிறப்பான விதத்தில் நினைவுகூர்வதாகவும் தெரிவித்தார்.

கேரளாவின் இராமகிருஷ்ண மதத்தலைவர், சுவாமி சத்பவானந்தா (Sadbhavananda),  இந்து குரு Sreemadh Vasudevananda Brahmanandhabhooti, கேரளாவின் இஸ்லாமிய மதகுரு Husain Madavoor, சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை தலைவர், கர்தினால் பசிலியோஸ் மார் கிளிமிஸ் உட்பட பல மதத்தலைவர்களும் விசுவாசிகளும், தங்கள் இடத்திலிருந்துகொண்டே இணையதளம் வழியாக இந்த பல்மத செப வழிபாட்டில் கலந்துகொண்டனர் ( UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2020, 13:58