இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்  

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை வேதனையளிக்கிறது

நகரங்களில் வேலையிழந்துள்ள மக்களுக்கு உணவும், பணமும் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர், ஆயினும் இந்த உதவிகள் சமமாக வழங்கப்படவில்லை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல், வேலை, ஊதியம், உணவு, தங்குமிடம் ஆகியவையின்றித் தவிக்கும், 12 கோடிக்கு அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை, மிகுந்த வேதனையளிக்கிறது என்று, இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மே 08, கடந்த வெள்ளியன்று, பயணக் களைப்பால் இரயில் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த இருபது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வேகமாக வந்த சரக்கு இரயில் ஏறியதில் 15 பேர் பலியானது குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இந்த விபத்தைப் பார்த்து தன் இதயம் அழுதது என்று கூறினார்.

இந்தியாவில் வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலையைக் காணும்போது இதயம் நொறுங்குகிறது என்றும், எனது மக்கள் சொந்த இல்லங்களுக்கு நடந்தே செல்கின்றனர், இவர்களில் சிலர் வழியிலே இறக்கின்றனர் என்றும், இந்நிலை மிகுந்த கவலையளிக்கின்றது என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.   

இந்த மக்கள், தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவதற்கு, சிறப்பு இரயில்களை அரசு ஏற்பாடு செய்திருக்கின்றபோதிலும், அவை போதுமானதாக இல்லை என்று கூறிய இந்திய ஆயர் பேரவைத் தலைவரான, கர்தினால் ஆசுவால்டு அவர்கள், நகரங்களில் வேலையிழந்துள்ள மக்களுக்கு உணவும், பணமும் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர், ஆயினும் இந்த உதவிகள் சமமாக வழங்கப்படவில்லை என்று கவலை தெரிவித்தார்.   

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் உள்ள அரசு, திருஅவை, அரசு-சாரா அமைப்பு மற்றும், மக்களும் உதவி வருகின்றனர் என்றுரைத்த கர்தினால் ஆசுவால்டு அவர்கள், இந்த மக்களின் ஆற்றாமையை அதிகாரிகள் புரிந்துகொள்ளவில்லை என்று, தான் நினைப்பதாகத் தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள தங்கள் கிராமங்களுக்குச் செல்வதற்கென, ஏற்கனவே 40 கி.மீ. தூரம் நடந்துவந்த அத்தொழிலாளர்கள் பயணக் களைப்பால் தண்டவாளத்தில் தூங்கினர். அவர்கள் இன்னும் 800 கி.மீ. தூரம் செல்ல வேண்டியிருந்தது என்று செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில், இவர்களில் 15 பேர் இறந்துள்ளனர். இந்நிகழ்வு, மும்பையிலிருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் பகுதிக்கு அருகில் உள்ள கர்மத் என்கிற இடத்தில் இடம்பெற்றுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2020, 12:43