ஆயர் நிடால் தாமஸ் ஆயர் நிடால் தாமஸ் 

கொள்ளை நோய் காலத்திலும் வானில் போர் விமானங்கள்

சிரியாவில், கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கும் இக்காலத்தில், போர் விமானங்கள் தொடர்ந்து வானை நிறைத்து வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி பரவலால் சமுதாய தனித்திருத்தல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இக்காலத்திலும், சிரியாவின் வடகிழக்குப் பகுதியில், வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.

Hassake பகுதியின் கல்தேய வழிபாட்டுமுறையின் உதவித் தலைவர் ஆயர் நிடால் தாமஸ் அவர்கள், சிரியாவின் தற்போதைய நிலை குறித்து Aid to the Church in Need (ACN) பிறரன்பு அமைப்பிடம் விளக்குகையில், கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கும் இக்காலத்தில், போர் விமானங்கள் தொடர்ந்து வானை நிறைத்து வருகின்றன என்று கூறினார்.  

சிரியாவில் பத்து ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போரால், அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ அறுபது விழுக்காடு குறைந்துள்ளவேளை, தற்போதைய சூழலால், எஞ்சியுள்ள கிறிஸ்தவர்களும் நாட்டைவிட்டு வெளியேறும் ஆபத்து அதிகரித்துள்ளது என்று, ஆயர் தாமஸ் அவர்கள் கூறினார்.

2011ம் ஆண்டில் போர் தொடங்குவதற்குமுன் அப்பகுதியில் இருபதாயிரம் கிறிஸ்தவக் குடும்பங்கள் வாழ்ந்தன, ஆனால் தற்போது 75 ஆயிரம் குடும்பங்களே உள்ளன என்றும், ஆயர் தாமஸ் அவர்கள் தெரிவித்தார்.

இப்போதைய சமுதாய தனித்திருத்தல் நிலையால், பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் எதிர்விளைவுகள் குறித்து எச்சரித்த ஆயர் தாமஸ் அவர்கள், தனது பகுதியில், குர்த் இன, இரஷ்ய, அமெரிக்க, துருக்கி மற்றும், Hezbollah கூட்டணிப் படைகள், அனைத்து மக்களையும் துன்புறுத்தி வருகின்றன என்று கூறினார். (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2020, 13:51