இத்தாலியில் கொரோனா தொற்றுநோய் சோதனை இத்தாலியில் கொரோனா தொற்றுநோய் சோதனை 

இத்தாலிய ஆயர்களின் அண்மைய 24 இலட்சம் உதவி

கோவிட்-19 நோயாளிகளிடையே பணியாற்றிவரும் 7 கத்தோலிக்க சேவை மையங்களுக்கு ஏற்கனவே 60 இலட்சம் யூரோக்களை வழங்கிய இத்தாலிய ஆயர்கள், மேலும் உதவி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தொற்றுநோயால் ஐரோப்பாவிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் மருத்துவமனைகளுக்கு உதவும் நோக்கத்தில் மேலும் 24 இலட்சம் யூரோக்களை வழங்க முன்வந்துள்ளது, இத்தாலிய கத்தோலிக்க ஆயர் பேரவை.

இத்தாலியில், கோவிட் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே பணியாற்றிவரும், பெஸ்காராவின் (Pescara) திருத்தந்தை ஆறாம் பவுல் அமைப்பு, ஜொவான்னி ரொத்தோந்தோ (San Giovanni Rotondo) எனுமிடத்திலுள்ள துயர் துடைப்பு மையம், லொம்பார்தோ-வெனெத்தா பகுதி பாத்தே பெனே பிராத்தெல்லி (Lombardo-Veneta Fatebenefratelli) அமைப்பு, புனித கமில்லஸ் புதல்வியர் அமைப்பு, தெய்வீக பராமரிப்பு துறவியர் சபை ஆகியோர் வழியாக இந்த உதவித்தொகை மக்களைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீராத நோயாளிகளிடையே ஏற்கனவே தொடர்ந்து பணியாற்றிவரும் இந்த கத்தோலிக்க அமைப்புகள், இந்த கோவிட்-19 தொற்று நோய்க் காலத்தில் தங்கள் பணிகளை விரிவாக்கி உழைத்துவரும் நிலையில், அவர்களுக்கு மேலும் ஊக்கம்தரும் வகையில், 24 இலட்சம் யூரோக்களை தற்போது தர முன்வந்துள்ளனர் இத்தாலிய ஆயர்கள்.

கோவிட்-19 நோயாளிகளிடையே பணியாற்றிவரும் 7 கத்தோலிக்க சேவை மையங்களுக்கு ஏற்கனவே அண்மைய சில வாரங்களில் 60 இலட்சம் யூரோக்களை இத்தாலிய ஆயர்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களாக விரும்பி, தங்கள் ஊதியத்திலிருந்து ஆயிரத்திற்கு எட்டு யூரோ என்ற விகிதத்தில், அரசு வழியாக தலத்திருஅவைக்கு வழங்கிவரும் தொகையிலிருந்தே இந்த உதவியை ஆற்ற முடிந்துள்ளதாகவும் இத்தாலிய ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2020, 14:18