செக் குடியரசில் கோவிட்-19 பரிசோதனை செக் குடியரசில் கோவிட்-19 பரிசோதனை 

கொள்ளை நோயிடையே பணியாற்றுவோர்க்கு நிதி திரட்டல்

இக்கொள்ளை நோய் காலத்தில் பணியாற்றுவோருக்கு நாம் வழங்கும் உதவி, ஒருமைப்பாட்டு அறிவிப்பின் அடையாளம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு செபம் வழியாக ஒருமைப்பாட்டை அறிவிக்க அழைப்பு விடுத்திருந்த Aid to the Church in Need என்ற அமைப்பு, தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டலையும் துவக்கியுள்ளது.

கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களோடு செபத்தின் வழியாக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்த, தேவையில் உள்ள தலத்திருஅவைகளுக்கு உதவிசெய்யும் ACN எனும் அமைப்பு, தற்போது, பல்வேறு உதவிக் குழுக்கள் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 50 இலட்சம் யூரோக்களைத் திரட்டும் இலக்குடன் பணியாற்றி வருகிறது.

இவ்வமைப்பின் செப ஒருமைப்பாட்டு அழைப்பிற்கு இவ்வாரத்தில் மட்டும் 50 துறவு இல்லங்கள் தங்கள் பதில்மொழிகளை வழங்கியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தங்கள் ஒருமைப்பாட்டு செய்தியையும் அனுப்பியுள்ளன.

இந்நோயால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பணியாற்றும் அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் ஆகியோர் வழியாக இந்த நிதி உதவிகளை வழங்க உள்ளதாக அறிவிக்கும் ACN அமைப்பு, தாங்கள் திரட்டி வரும் நிதியானது, பெருங்கடலின் ஒரு சிறு துளிபோல் தெரிந்தாலும், இது மக்களின் ஒருமைப்பாட்டு அறிவிப்பின் அடையாளமாக உள்ளது என தெரிவிக்கிறது.

மத்தியக்கிழக்கு நாடுகள், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, இலத்தீன் அமேரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளுக்கு விரைவில் நிதியுதவிகளை அனுப்ப உள்ளதாகவும் இந்த கத்தோலிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் உருவாக்கியுள்ள துயரங்களுக்கு, ஆன்மீக,  மற்றும், மேய்ப்புப்பணி சார்ந்த ஒருமைப்பாடு தேவைப்படுவதை உணர்த்தும் நோக்கத்தில், செப, மற்றும், நிதியுதவிகளுக்கு அழைப்புவிடுத்துள்ள ACN அமைப்பு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வரும் அருள்பணியாளர்கள், மற்றும், துறவியருக்கு இந்த நிதி ஊக்கமளிக்கும் பேருதவியாக அமையும் என அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2020, 14:39