புனித திருத்தந்தை 23ம் யோவான் புனித திருத்தந்தை 23ம் யோவான் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-18

“நாடுகளின் உண்மையான மற்றும், உறுதியான அமைதி, ஆயுதங்களைச் சமமாகக் கொண்டிருப்பதில் இல்லை, ஆனால், ஒருவர் ஒருவரை நம்புவதில் அடங்கியுள்ளது - புனித திருத்தந்தை 23ம் யோவான்

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை 23ம் யோவான் (ஜான்)-5

புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், நாடுகளுக்கு இடையே, மக்கள் மத்தியில் அமைதியை, ஒப்புரவை விரும்பியவர். இவருக்கு முழு மனித சமுதாயத்தின் நலனே முக்கியமாக இருந்தது. இவர் ஒரு சமயம் இவ்வாறு சொல்லியிருக்கிறார். “நாடுகளின் உண்மையான மற்றும், உறுதியான அமைதி, ஆயுதங்களைச் சமமாகக் கொண்டிருப்பதில் இல்லை, ஆனால், ஒருவர் ஒருவரை நம்புவதில் அடங்கியுள்ளது. மனிதரையும், நாடுகளையும் நச்சுபடுத்தும், மற்றும், ஏராளமான இதயங்களை அலைக்கழிக்கும் அனைத்து தீமைகளுக்கும் ஒரேயொரு காரணம்தான் உண்டு, அதுவே உண்மையைப் பற்றிய அறியாமை. அமைதியான உள்ளம் படைத்த மனிதர், கற்றறிந்த மனிதரைவிட அதிக நன்மைகள் ஆற்றுகிறார். அச்சங்களை அல்ல, ஆனால், உங்கள் நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் பற்றி ஆலோசனை செய்யுங்கள். உங்களது ஏமாற்றங்களை அல்ல, ஆனால், முழுமையடையாத உங்கள் திறமைகள் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் முயற்சி செய்து தோல்வியடைந்தவை அல்ல, நீங்கள் செய்ய வேண்டிய இன்னும் இயலக்கூடியவைகளாய் இருப்பவை பற்றி கருத்தாய் இருங்கள்”. இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், இத்தாலியர் மத்தியில், “நல்ல திருத்தந்தை” என்றே அறியப்படுகிறார். திருஅவையில், ஒருவர் புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, அவரின் பரிந்துரையால் ஒரு புதுமை நடந்திருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அருளாளர் திருத்தந்தை 23ம் யோவான் அவர்களை, 2014ம் ஆண்டு ஏப்ரல் 27ம் நாள் அதிகாரப்பூர்வமாக புனிதராக அறிவித்தார். இதிலிருந்தே திருத்தந்தை 23ம் யோவான் அவர்களின் எளிய, புனித வாழ்வியல் பற்றி உணர முடிகின்றது.

திருமடல்கள்

புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், தனது ஐந்தாண்டுகால தலைமைப்பணிக் காலத்தில், எட்டு திருமடல்களை வெளியிட்டார். அவர் தலைமைப் பணியைத் தொடங்கிய எட்டு மாதங்களுக்குள், Ad Petri Cathedram என்ற திருமடலை வெளியிட்டு, உண்மை, ஒற்றுமை, மற்றும், அமைதி மீது தனக்கிருந்த தாகத்தை வெளிப்படுத்தினார். அடுத்து, புனித யோவான் மரிய வியான்னி இறந்ததன் நூறாம் ஆண்டை முன்னிட்டு, Sacerdotii nostri primordia என்ற திருமடலையும், செபமாலை பற்றி Grata recordatio என்ற திருமடலையும், மறைப்பணித்தளங்களில் அந்தந்த இடத்து அருள்பணியாளர்கள் மற்றும், பொதுநிலையினர் பற்றி Princeps pastorum என்ற திருமடலையும், அன்னையும் ஆசிரியையும் (Mater et magistra) என்ற திருமடலையும், எட்டாவது திருமடலாக, “அவனியில் அமைதி" (Pacem in Terris) என்ற திருமடலையும் வெளியிட்டார். அமைதி பற்றி அவர் எழுதிய இந்த இறுதி திருமடல், பன்னாட்டு சமுதாயத்தில், மிகப்பெரிய தாக்கத்தைக் கொணர்ந்தது. 15 ஆயிரத்திற்கு அதிகமான சொற்களைக் கொண்ட இம்மடல், நன்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும் என்று எழுதப்பட்ட முதல் திருமடலாகும். மேலும், 25 ஆயிரத்திற்கு அதிகமான வார்த்தைகளைக் கொண்ட, “அன்னையும் ஆசிரியையும்” என்ற திருமடல், நீளமான திருமடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

1962ம் ஆண்டு அக்டோபரில், கியூப ஏவுகணை பிரச்சனை நிலவியபோது, புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தைலவர் ஜான் எஃப். கென்னடி அவர்களுக்கும், முன்னாள் சோவியத் யூனியனின் அதிபர் நிக்கித்தா குருஷோவ் (Nikita Sergeyevich Khrushchev) அவர்களுக்கும் இடையே இடைநிலை வகிக்க முன்வந்தார். இவ்விருவரும், இத்திருத்தந்தை, அமைதிக்காக அர்ப்பணித்திருந்ததை பாராட்டியுள்ளனர். பின்னாளில் திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், புற்றுநோயால் இறுதி நாள்களை எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில், அமெரிக்க அரசியல் இதழாசிரியரும், உலக அமைதிக்காக உழைத்தவருமான Norman Cousins வழியாக, குருஷோவ் அவர்கள், திருத்தந்தை குணம் பெற வேண்டி தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பினார். திருத்தந்தையும் தன் கைப்பட தட்டச்சில் எழுதி நன்றி தெரிவித்தார். Cousins அவர்களும் நியுயார்க் சென்று, Time இதழில், திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், “ஆண்டின் மனிதர்” என்று வெளியிடப்படச் செய்தார். 1963ம் ஆண்டு சனவரி மாதம் 4ம் தேதி டைம் இதழின் அட்டைப்படத்தில், திருத்தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் ஆண்டின் மனிதர் என அவ்விதழ் கவுரவப்படுத்தியது. Time இதழின், “ஆண்டின் மனிதர்” என்ற பெயரைப் பெற்ற முதல் திருத்தந்தை இவர்.

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், 1959ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி, பிரிந்திசி நகர் புனித இலாரன்சை மறைவல்லுனர் என்று அறிவித்தார். இவர் தனது தலைமைப்பணிக் காலத்தில், ஐந்து முறை கூட்டிய கர்தினால்கள் அவையில், 52 புதிய கர்தினால்களை அறிவித்தார். கர்தினால்கள் அவையின் எண்ணிக்கை எழுபது என்று, 1586ம் ஆண்டில் திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் செய்திருந்த வரையறையை மாற்றி, இவர் அதை விரிவுபடுத்தினார். இவர் மூன்று கர்தினால்கள் பெயரை இரகசியமாகவும் வைத்திருந்தார். ஆனால் அப்பெயர்களை வெளியிடுவதற்கு முன் இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். அனைத்து கர்தினால்களும் ஆயர்களாக இருக்க வேண்டுமென்ற ஆணையை 1962ம் ஆண்டில் இவர் வெளியிட்டார். அதோடு, ஆயர்களாக இல்லாமலிருந்த 12 கர்தினால்களை, இவரே ஆயர்களாகத் திருநிலைப்படுத்தினார்.

திருத்தந்தை 23ம் யோவான் அவர்களுக்கு, 1962ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி வயிற்றில் புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. எட்டு மாதங்கள்வரை அச்செய்தி பொதுவில் அறிவிக்கப்படாமலே இருந்தது. இறுதியில் 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி இறைவனோடு ஐக்கியமானார், நல்ல திருத்தந்தை, புனித திருத்தந்தை 23ம் யோவான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2020, 13:01