மிலான் பேராலயத்தில் Andrea Bocelli மிலான் பேராலயத்தில் Andrea Bocelli  

அந்திரேயா பொச்செல்லி வழங்கிய ஈஸ்டர் இசை நிகழ்ச்சி

உலகப் புகழ்பெற்ற இத்தாலியப் பாடகர், அந்திரேயா பொச்செல்லி (Andrea Bocelli) அவர்கள், மிலான் நகரின் பேராலயத்தில், ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழாவன்று, தனி ஒருவராக நின்று, பல பக்திப்பாடல்களைப் பாடினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகப் புகழ்பெற்ற இத்தாலியப் பாடகர், அந்திரேயா பொச்செல்லி (Andrea Bocelli) அவர்கள், மிலான் நகரின் பேராலயத்தில், ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழாவன்று, தனி ஒருவராக நின்று, வழங்கிய இசைக்கச்சேரி, யூடியூப் வழியே உலக மக்களைச் சென்றடைந்து வருகிறது.

வாழ்வின் வெற்றியைக் கொண்டாடும் உயிர்ப்புப் பெருவிழாவன்று, இத்தாலிய மக்களின் உள்ளங்களையும், உலக மக்கள் உள்ளங்களையும் உற்சாகப்படுத்த எனக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்புக்கு நன்றி என்று பாடகர் பொச்செல்லி அவர்கள் கூறியுள்ளார்.

உலகின் பெரும் pipe organகளில் ஒன்றாக கருதப்படும் மிலான் பேராலய இசைக்கருவியை, ஆலய இசைக் கலைஞர் இம்மானுவேல் வியனெல்லி (Emanuele Vianelli) அவர்கள் இசைக்க, பொச்செல்லி அவர்கள் புகழ்பெற்ற பல பக்திப் பாடல்களைப் பாடிய இந்நிகழ்ச்சி, யூடியூப் வழியே 25 நிமிட காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது,

மிலான் நகர மக்களும், இத்தாலி நாட்டின் மக்களும் இந்த நெருக்கடியிலிருந்து புத்துயிருடன் வாழ்வைத் துவங்குவர் என்பதை தான் நம்புவதாகவும், வாழ்வைப் பறைசாற்ற உயிர்ப்புத் திருவிழாவை விட சிறந்த அடையாளம் இல்லை என்றும் பாடகர் பொச்செல்லி அவர்கள் இக்காணொளியின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

“Panis Angelicus” என்ற புகழ்பெற்ற பக்திப்பாடலுடன் துவங்கும் இக்காணொளியில், இசையமைப்பாளர் Bach அவர்கள் இயற்றிய “Ave Maria”, உட்பட சில பாடல்களைப் பாடியுள்ள பொச்செல்லி அவர்கள், இறுதியாக, John Newton அவர்கள் உருவாக்கிய “Amazing Grace” என்ற புகழ்பெற்ற பாடலுடன் இந்த இசைத் தொகுப்பை நிறைவு செய்துள்ளார்.

இக்காணொளியில், கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்குதலால் இத்தாலியில், அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள பெர்கமோ, பிரெஷ்யா, வெனிஸ் போன்ற நகரங்களும், மற்றும், பாரிஸ், நியூ யார்க் ஆகிய பெருநகரங்களும், மக்களின் நடமாட்டம் ஏதுமின்றி காட்டப்பட்டுள்ளன.

மிலான் நகர மேயர் ஜியுசெப்பே சாலா (Giuseppe Sala) அவர்கள் விடுத்த அழைப்பினை ஏற்று, எவ்வித தொகையும் பெறாமல், பொச்செல்லி அவர்கள், மிலான் பேராலயத்தில் வழங்கிய இந்த இசைக் கச்சேரியை, யூடியூப் வழியே கடந்த மூன்று நாள்களில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 33 மில்லியனுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் 19 நெருக்கடி வேளையில், பொச்செல்லி அறக்கட்டளை பல்வேறு வழிகளில் உதவிகள் செய்துவருகிறது என Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2020, 14:39