"பெண்கள், மனித உடன்பிறந்தநிலையை உருவாக்குகிறவர்கள்" கூட்டம் "பெண்கள், மனித உடன்பிறந்தநிலையை உருவாக்குகிறவர்கள்" கூட்டம் 

பெண்கள், மனித உடன்பிறந்தநிலையை உருவாக்குகிறவர்கள்

கத்தோலிக்கப் பெண்கள் அமைப்புகளின் உலக கூட்டமைப்பும் (UMOFC), திருப்பீட பல்சமய உரையாடல் அவையும் இணைந்து, “பெண்கள் மனித உடன்பிறந்தநிலையைக் கட்டியெழுப்புகிறவர்கள்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தின

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

மனித உடன்பிறந்தநிலை குறித்து, தாங்களும், மற்றவரும் தெளிவாக கற்றுக்கொள்ள உதவுவதற்கு, பல்வேறு மதங்களைச் சார்ந்த பெண்கள் உறுதியளித்துள்ளனர்.

உலகளாவிய பெண்கள் நாளை முன்னிட்டு, மனித உடன்பிறந்தநிலை குறித்த ஏடு பற்றி கலந்துரையாடிய, கத்தோலிக்கப் பெண்கள் அமைப்புகளின் உலக கூட்டமைப்பு வெளியிட்ட இறுதி அறிக்கையில், இவ்வாறு அவர்கள் அறிவித்துள்ளனர்.

நீதியிலும் அமைதியிலும் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கு விரும்பும் அனைவரும், சமுதாய நட்புணர்வு மற்றும், ஒருவரையொருவர் மதித்தலின் அடிப்படையில், தங்களோடு இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையையும், இந்த கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.

2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி அபு தாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஸ்லாம் பெரிய குரு அல் அசார் அகமது அல் தாயிப் அவர்களும் கையெழுத்திட்ட உலக அமைதி மற்றும், ஒன்றிணைந்து வாழ்தல் குறித்த மனித உடன்பிறந்தநிலை பற்றிய ஏட்டை, மனித சமுதாயத்தைத் தாய்மையோடு தழுவிக்கொள்ளும் ஓர் ஏடாக நோக்குவதாக, அப்பெண்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆன்மீக, மனித மற்றும், சமுதாய விழுமியங்களை ஊக்குவித்தல், குடும்பம் என்ற அமைப்பைப் பேணிக் காப்பதற்குரிய திட்டங்களுக்கு, அரசியல், ஊடகம், பொருளியல், கல்வி, அறிவியல், கலைகள் ஆகிய துறைகளின் பிரதிநிதிகளோடு சேர்ந்து உழைத்தல், மதங்கள் ஒருபோதும் வெறுப்பைத் தூண்டாதிருக்க அல்லது, வன்முறை மற்றும் போரை மதத்தின் பெயரால் நியாயப்படுத்தாதிருக்க உறுதி செய்வதற்கு, புதிய தலைமுறைகளோடு சேர்ந்து செயல்படல் உட்பட சில தீர்மானங்களும், இக்கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கத்தோலிக்கப் பெண்கள் அமைப்புகளின் உலக கூட்டமைப்பும் (UMOFC), திருப்பீட பல்சமய உரையாடல் அவையும் இணைந்து, “பெண்கள் மனித உடன்பிறந்தநிலையைக் கட்டியெழுப்புகிறவர்கள்” என்ற தலைப்பில், மார்ச் 3, இச்செவ்வாயன்று இக்கூட்டத்தை நடத்தி, இறுதி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2020, 14:52