முதுபெரும்தந்தை, பிரான்செஸ்கோ மொராலியா முதுபெரும்தந்தை, பிரான்செஸ்கோ மொராலியா 

வெனிஸ் முதுபெரும்தந்தையின் காணொளிச் செய்தி

புனித யோசேப்பு திருநாளையும், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தையும் இணைத்து, வெனிஸ் முதுபெரும்தந்தை பிரான்செஸ்கோ மொராலியா அவர்கள், தன் மறைமாவட்ட மக்களுக்கு காணொளிச் செய்தியை வழங்கியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்பிக்கைக்குரியவரும், நீதிமானுமான புனித யோசேப்பிடம் இறைவன் தனது மிக உன்னதமான கருவூலங்களான இயேசுவையும், மரியாவையும் ஒப்படைத்தார் என்று, வெனிஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயரான முதுபெரும்தந்தை, பிரான்செஸ்கோ மொராலியா அவர்கள், ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

மார்ச் 19, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட புனித யோசேப்பு திருநாளையும், வெனிஸ் பகுதி மக்கள் சந்தித்துவரும் பெரும் நெருக்கடியான கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தையும் இணைத்து, முதுபெரும்தந்தை மொராலியா அவர்கள், தன் மறைமாவட்ட மக்களுக்கு இக்காணொளிச் செய்தியை வழங்கியுள்ளார்.

புனித யோசேப்பு, மௌனம் காத்த புண்ணியவாளர்

புனித யோசேப்பு, மௌனம் காத்த புண்ணியவாளர் என்பதை இச்செய்தியில் குறிப்பிட்டுப் பேசியுள்ள முதுபெரும்தந்தை மொராலியா அவர்கள், நம்பிக்கை கொண்டோரின் முதல் அடையாளம், இறைவனின் குரலுக்குச் செவிமடுப்பதாகும் என்பதால், அவ்விதம் செவிமடுக்க, ஒருவர் கொண்டிருக்கும் மௌனம் பெரிதும் உதவும் என்று எடுத்துரைத்தார்.

திருஅவையின் பாதுகாவலரான புனித யோசேப்பு, கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கும் இவ்வுலகையும், திருஅவையையும் தன் பரிந்துரையால் பாதுக்காக்க, வேண்டுவோம் என்று, முதுபெரும்தந்தை மொராலியா அவர்கள், இக்காணொளிச் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

வெனிஸ் நகர சன்னல்களில் வெள்ளைத்துணி

மார்ச் 19ம் தேதி மாலை 9 மணிக்கு இத்தாலிய திருஅவை முழுவதும் இணைந்து செபமாலை செபிக்கும் வேளையில், வெனிஸ் நகரில் இருக்கும் கத்தோலிக்கர், இந்த செப முயற்சியில் ஈடுபடுவதன் அடையாளமாக, தங்கள் இல்லங்களின் சன்னல்களில் வெள்ளைத்துணியைக் கட்டிவைக்குமாறு, முதுபெரும்தந்தை மொராலியா அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2020, 15:07