யாங்கூன் பேராலயம் யாங்கூன் பேராலயம் 

மியான்மார் - முக்கிய விழாக்கள் ஏப்ரல் 30 வரை நிறுத்தம்

மியான்மாரில், மக்கள் பொது நிகழ்வுகளைத் தவிர்க்குமாறும், செபம், நோன்பு, திருநற்கருணை ஆராதனை, தியானம், சுயஆய்வு ஆகியவற்றில் ஈடுபடுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மரணத்தை வருவிக்கும் கொரோனா தொற்றுக்கிருமி தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மியான்மாரில், நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் பங்குபெறும் லூர்து அன்னை மரியா விழாக் கொண்டாட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று, தலத்திருஅவை அறிவித்துள்ளது.

மியான்மார் அரசுத்தலைவர் அலுவலகம் அறிவித்துள்ளதையடுத்து, யாங்கூன் பேராலயத்தில் நடைபெறவிருந்த அருள்பணித்துவ திருநிலைப்பாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயினும், கத்தோலிக்க ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும், கத்தோலிக்கர், கோவிட்-19 தொற்றுக்கிருமி நோயாளிகளுக்காகச் செபிக்குமாறும், தலத்திருஅவை ஊக்கப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியை முன்னிட்டு, உலக அளவில் மனித சமுதாயத்தின் மீது உடன்பிறந்த உணர்வை உருவாக்குமாறு, யாங்கூன் பேராயரும், ஆசிய ஆயர்கள் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவருமான, கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Irrawaddy பகுதியை உள்ளடக்கிய Pathein மறைமாவட்ட ஆயர் John Hsane Hgyi அவர்கள், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், செபம், நோன்பு, திருநற்கருணை ஆராதனை, தியானம், சுயஆய்வு, ஒப்புரவு அருளடையாளம் ஆகியவற்றில் பங்குபெறுமாறும் பரிந்துரைத்துள்ளார்.

மார்ச் 16ம் தேதி நிலவரப்படி, உலகில் 1,70,191 பேர் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர், இத்தாலியில் ஏறத்தாழ 24,800 பேரும், ஈரானில் ஏறத்தாழ 14 ஆயிரம் பேரும், இஸ்பெயினில் ஏறத்தாழ எட்டாயிரம் பேரும்  இக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மியான்மார் அரசு, அந்நாட்டின் மிகப்பெரிய தண்ணீர் விழாவை இரத்து செய்துள்ளது. வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை, பொது நிகழ்வுகள் மற்றும் விழாக்களையும் அரசு இரத்து செய்துள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2020, 15:13