இயேசு சபை உலகத் தலைவருடன், தெற்கு ஆசிய இயேசு சபையினரின் மாநிலத் தலைவர்கள் - கோப்புப் படம் இயேசு சபை உலகத் தலைவருடன், தெற்கு ஆசிய இயேசு சபையினரின் மாநிலத் தலைவர்கள் - கோப்புப் படம் 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இயேசு சபையினர்

இந்திய குடியரசின் அமைப்பாளர்கள் விட்டுச்சென்ற அரசியல் சாசனத்தைக் காப்பதற்கும், மத சார்பற்ற இந்தியாவைக் காப்பதற்கும் இயேசு சபையினர் தொடர்ந்து குரல் எழுப்புவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) உடனடியாக திரும்பப் பெற்று, அனைத்து தரப்பினரோடும் உரையாடலை மேற்கொள்ள, இந்திய நடுவண் அரசை தாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக, இந்தியாவில் பணியாற்றும் இயேசு சபையினர் அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

தெற்கு ஆசியாவில் பணியாற்றும் இயேசு சபையினரின் மாநிலத் தலைவர்கள், பிப்ரவரி 23ம் தேதி முதல், 29ம் தேதி முடிய, நேபாளத்தில் மேற்கொண்ட ஒரு கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில், தெற்கு ஆசிய இயேசு சபை அவையின் தலைவர், அருள்பணி ஜார்ஜ் பட்டேரி அவர்கள், இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி, இந்திய நடுவண் அரசு வெளியிட்ட இந்தப் புதிய சட்டம், மிக அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும், இதைத் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களில் நிகழ்ந்த போராட்டங்களை தடைசெய்ய, அரசு மேற்கொண்ட அடக்குமுறைகளையும், குறிப்பாக, அண்மையில், டில்லியில் நடைபெற்ற வன்முறைகளையும், இயேசு சபையினர், வன்மையாகக் கண்டனம் செய்வதாக இவ்வறிக்கை கூறுகிறது.

இந்திய குடியரசின் அமைப்பாளர்கள் விட்டுச்சென்ற அரசியல் சாசனத்தைக் காப்பதற்கும், மத சார்பற்ற இந்தியாவைக் காப்பதற்கும் இயேசு சபையினர் தொடர்ந்து குரல் எழுப்புவர் என்று, இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியான, அதே வேளையில், உறுதியான, அச்சமற்ற முறையில் போராட்டங்களைத் தொடர்வதற்கு, இயேசு சபையினர் முயற்சிகள் மேற்கொள்வர் என்று, இவ்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2020, 15:24