திருத்தந்தை 12ம் பயஸ் திருத்தந்தை 12ம் பயஸ் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-13

மனிதர் அனைவரும், தமது அன்பில் முழுவதும் பிணைக்கப்பட்டவர்களாய், ஒன்றிணைந்து வாழவும், ஒருவர் ஒருவருக்கு உதவிபுரிய தங்களையே அர்ப்பணிக்கவுமே கடவுள் அவர்களைப் படைத்தார்- திருத்தந்தை 12ம் பயஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 12ம் பயஸ்-6

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையில் தலைமைப்பணியை வகித்த காலம், துன்பங்களும், சவால்களும் நிறைந்த காலம். அக்காலக்கட்டத்தில், இரண்டாம் உலகப் போர் (01,செப்.1939– 02,செப்.1945) தொடங்கி முடிவடைந்திருந்தது.  இப்போருக்குப் பின்னர், இத்திருத்தந்தை பல்வேறு காரியங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அமெரிக்க ஐக்கிய நாடு, வத்திக்கானுடன் தூதரக உறவுகளைப் புதுப்பிக்க விழைந்தது. இவ்வுறவு, 1868ம் ஆண்டில், அமெரிக்க காங்கிரஸ் அவை, பாப்பிறை மாநிலங்களின் அமைச்சரை அங்கீகரிக்க மறுத்ததையொட்டி முறிந்திருந்தது. 1945ம் ஆண்டு முதல், 1953ம் ஆண்டு வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் 33வது அரசுத்தலைவராகப் பணியாற்றிய Harry Truman அவர்கள், திருத்தந்தையிடம், அந்த உறவைப் புதுப்பித்துக் கொள்வதற்கு விண்ணப்பித்தார். அவர், திருத்தந்தையிடம், நிரந்தர அமைதி, கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படையிலே பெற முடியும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரை நூற்றாண்டுக்கும் முன்னரே தீர்மானித்தது போல், எங்களது நாடு ஒரு கிறிஸ்தவ நாடு என்று கூறினார்.

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களும், அமெரிக்கர்கள், உரோம் நகர் மீது குண்டுகளை வீசியதற்கு கண்டனத்தை தெரிவித்தார். அதேநேரம் அவர், போரினால் சிதைந்திருந்த ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கும், சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், Truman, அவரைத் தொடர்ந்து அமெரிக்க அரசுத்தலைவராகப் பதவியேற்ற, Dwight D. Eisenhower ஆகிய இருவரின் நிர்வாகங்களுக்கு ஆதரவளித்தார். இத்தாலியர்கள் ஆதிக்கம் செலுத்திய திருப்பீட தலைமையகத்தில், அமெரிக்கா, ஏனைய ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா மற்றும், ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பணியாற்ற அழைத்தார். அமெரிக்க இறையியல் மாணவர்கள், சிறந்த பயிற்சி பெறவும், உலகளாவிய அனுபவம் பெறவும், உரோம் நகரில், அமெரிக்க அருள்பணித்துவ பயிற்சி மாணவர்களுக்கென, பெரிய அருள்பணித்துவ கல்லூரி ஒன்றை உருவாக்கினார். இக்கல்லூரியின் திறப்பு விழாவில், அமெரிக்காவின் அனைத்து ஆயர்களும் பங்குபெற்றனர்.

இலத்தீன் அமெரிக்கா

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1939ம் ஆண்டில், திருத்தந்தையாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இலத்தீன் அமெரிக்க மறைமாவட்டங்கள் வத்திக்கானின் பிறரன்புப் பணிகளுக்கென, உணவுப் பொருள்கள், ஆடைகள் போன்றவற்றை கப்பல்கள் வழியாக அனுப்பி உதவின. போருக்குப்பின், 1946க்கும், 1958ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், எல்லாப் பெரிய திருஅவைகளும், வத்திக்கான் வானொலி வழியாக தொடர்புகொள்வதற்கு திருத்தந்தை வழியமைத்தார். இலத்தீன் அமெரிக்காவில் அருள்பணியாளர்கள் பற்றாக்குறை இருந்ததால், இவர் 1958ம் ஆண்டில், இலத்தீன் அமெரிக்காவிற்கு, ஒரு நிரந்தர திருத்தந்தை பணிக்குழுவை உருவாக்கினார். திருத்தந்தையின் அழைப்பின்பேரில், இலத்தீன் அமெரிக்காவில், தொமினிக்கன், இயேசு சபை போன்ற பல்வேறு துறவு சபைகளும், டிராப்பிஸ்ட் துறவு சபையும்கூட பணித்தளங்களை ஆரம்பித்தன.

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களும், ஒப்பந்தங்களும்

முதல் உலகப் போருக்குப்பின், முடியாட்சிகள், இராணுவ ஆட்சிகள், பாசிசம், கம்யூனிசம், வலதுசாரி, இடதுசாரி அரசுகள், மக்களாட்சி அரசுகள் போன்ற பல்வேறு வகையான குறுகிய கால அரசுகளை, திருஅவை எதிர்கொண்டது. இவ்வாறு மாறி மாறி இடம்பெற்ற அரசியல் சூழல்களில், கத்தோலிக்கருக்கு சமய சுதந்திரம் வழங்கப்படுமாறு, வத்திக்கான் வலியுறுத்தி வந்தது. இத்திருத்தந்தை, தன் பணிக்காலத்தில், நாடுகளுடன் ஏறத்தாழ முப்பது ஒப்பந்தங்கள் மற்றும், உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டார். இவை, திருஅவையின் சுதந்திரத்தையே முக்கியமாகக் கொண்டிருந்தன. 

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், பிரேசில் (1950), கானடா (1951), பிரான்ஸ் (1952), பிரித்தானியா (1953), நெதர்லாண்ட்ஸ் (1957), அமெரிக்க ஐக்கிய நாடு (1957) ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தினார். இவர், இந்தோனேசியா (1947), பாலஸ்தீனம் மற்றும், ஜோர்டன் (1948), டாக்கர் (1948), பாகிஸ்தான் (1950) மற்றும், தாய்லாந்தில் (1957) புதிய அப்போஸ்தலிக்க பிரதிநிதித்துவங்களை உருவாக்கினார். உருகுவாய்(1939), லெபனான் (1947), பிலிப்பீன்ஸ் (1951), சீனா (1946), இந்தோனேசியா (1950), எகிப்து (1947), இந்தியா (1948), லைபீரியா (1951), பாகிஸ்தான் (1951), ஜப்பான் (1952), சிரியா (1953), ஈரான் (1953), எத்தியோப்பியா (1957) ஆகிய நாடுகளில் புதிய திருப்பீட தூதரகங்களை ஏற்படுத்தினார். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவரின் பிரதிநிதி, 1939ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வத்திக்கானில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார். யுனெஸ்கோ, உலக தொழில் அமைப்பு போன்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு, திருப்பீடத்தின் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டனர். இந்த ஒப்பந்தங்களை உருவாக்கியதன் நோக்கத்தை தெளிவுபடுத்திய திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், “திருஅவை சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உதவும்படி உலகத் தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன். ஒப்பந்தங்கள், சட்டமுறையானவை. மக்கள் மற்றும் நாட்டின் நலனை கருத்தில்கொண்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்களின்படி, நாடுகளில், கத்தோலிக்கத் திருஅவையும், கத்தோலிக்கரும், தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாக வாழவும், அதை வளர்த்துக்கொள்ளவும் வழியமைக்கின்றன” என்று கூறியுள்ளார். “மனிதர், ஒருவர் ஒருவரிடமிருந்து பிரிந்து, தொடர்பற்று, தனித்து வாழ்வதற்காக, கடவுள், மனிதக் குடும்பத்தைப் படைக்கவில்லை. ஆனால், மனிதர் அனைவரும், தமது அன்பில் முழுவதும் பிணைக்கப்பட்டவர்களாய், ஒன்றிணைந்து வாழவும், ஒருவர் ஒருவருக்கு உதவிபுரிய தங்களையே அர்ப்பணிக்கவுமே கடவுள் அவர்களைப் படைத்தார்” என்று திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2020, 14:57