எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் பீட்டர் எர்டோ எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் பீட்டர் எர்டோ 

Lovari மொழியில் 52வது உலக திருநற்கருணை மாநாட்டில் திருப்பலி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 52வது உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றுவார் என்று, ஹங்கேரி ஆயர் பேரவையும் அரசுத்தலைவரும் உறுதியாக நம்புகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வருகிற செப்டம்பரில் ஹங்கேரி நாட்டில் நடைபெறும் 52வது உலக திருநற்கருணை மாநாட்டில், முதன்முறையாக, lovari மொழியில் திருப்பலி நிறைவேற்றப்படும் என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

ஹங்கேரி நாட்டுத் தலைநகர் புடாபெஸ்ட்டில், வருகிற செப்டம்பர் 13ம் தேதி தொடங்கும் 52வது உலக திருநற்கருணை மாநாடு பற்றி, அந்நாட்டு வானொலியில் விவரித்த எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் பீட்டர் எர்டோ அவர்கள், நாடோடி இன மக்கள் பலரின் பேச்சுவழக்கு மொழிகளில் ஒன்றான lovari மொழியில் திருப்பலி நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

lovari மொழி, நாடோடி இன மக்களின் மொழியாகவும் உள்ளது என்றும், இம்மாநாட்டு நாள்களில், புடாபெஸ்ட் மற்றும், அந்நாட்டின் பல நகரங்களில் ஏழைகள் மற்றும், தேவையில் இருப்போர் வரவேற்கப்பட்டு விழாவில் பங்கேற்றத் தூண்டப்படுவர் என்றும், கர்தினால் எர்டோ அவர்கள் எடுத்துரைத்தார்.

அறிவியல் கருத்தரங்கு, புகழ்பெற்ற கலைஞர்கள் வழங்கும் இசை நிகழ்ச்சிகள், உள்ளத்தை உருக்கும் சாட்சியங்கள், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகளும், அம்மாநாட்டில் நடைபெறும் என்றும், கர்தினால் எர்டோ அவர்கள் கூறினார்.

இம்மாநாடு, உலகில் கிறிஸ்தவ அன்புணர்வை எடுத்துரைப்பதாக அமையும் என்று கூறிய கர்தினால் எர்டோ அவர்கள், இதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்குகொள்வதற்கு  ஹங்கேரி அரசுத்தலைவர் János Áder அவர்களும், ஆயர்களும் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் கூறினார்.

52வது உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார் என்று, ஹங்கேரி ஆயர் பேரவையும் அரசுத்தலைவரும் உறுதியாக நம்புகின்றனர் என்றும், கர்தினால் எர்டோ அவர்கள் கூறினார்.

முதல்முறையாக திருநற்கருணை பெறுவதற்கு, 4,500க்கும் அதிகமானோரும், ஏறத்தாழ எண்பது நாடுகளிலிருந்து ஐம்பதாயிரத்திற்கு அதிகமானோரும் பங்குகொள்வதற்குப் பதிவுசெய்துள்ளனர் என்றும், ஹங்கேரி நாட்டு கர்தினால் பீட்டர் எர்டோ அவர்கள் அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2020, 15:22