அபு தாபியில் நிறைவேற்றப்பட்ட நன்றித் திருப்பலி அபு தாபியில் நிறைவேற்றப்பட்ட நன்றித் திருப்பலி 

அபு தாபி திருத்தூதுப் பயண நினைவாக, நன்றித் திருப்பலி

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் நிறைவுற்று 12 மாதங்கள் சென்று, அப்பயணம் நம்மில் எவ்வகை தாக்கங்களை உருவாக்கியுள்ளது, இப்பயணம் நமது விசுவாச வாழ்வை ஆழப்படுத்தியுள்ளதா என்ற கேள்விகளை எழுப்பிய ஆயர் பால் ஹிண்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அபு தாபியில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் முதல் ஆண்டு நிறைவாக, சனவரி 5, இப்புதன் மாலையில், புனித யோசேப்பு பேராலயத்தின் வளாகத்தில் நன்றி திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

தென் அரேபியாவின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றும் ஆயர் பால் ஹிண்டர் (Paul Hinder) அவர்கள் நிறைவேற்றிய இத்திருப்பலியில், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தில் கலந்துகொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகள் பங்கேற்றனர்.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் நிறைவுற்று 12 மாதங்கள் சென்று, அப்பயணம் நம்மில் எவ்வகை தாக்கங்களை உருவாக்கியுள்ளது என்ற கேள்வியுடன் தன் மறையுரையைத் துவக்கிய ஆயர் ஹிண்டர் அவர்கள், இப்பயணம் நமது விசுவாச வாழ்வை ஆழப்படுத்தியுள்ளதா என்பதை சிந்தித்துப் பார்க்க அழைப்பு விடுத்தார்.

மனித உடன்பிறந்த நிலை என்ற முக்கியமான எடு, திருத்தந்தையாலும், அல் அசார் தலைமைக்குருவாலும் கையெழுத்திடப்பட்டதை நினைவுகூர்ந்த ஆயர் ஹிண்டர் அவர்கள், இவ்வேட்டில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், நம் தனிப்பட்ட வாழ்வில், எவ்வகை மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன என்ற கேள்வியையும் எழுப்பினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அபு தாபியில் நிறைவேற்றியத் திருப்பலியில் வழங்கிய மறையுரையிலிருந்து ஒரு சில வரிகளை மீண்டும் வாசித்த ஆயர் ஹிண்டர் அவர்கள், கிறிஸ்துவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அச்சமின்றி வாழ திருத்தந்தை விடுத்த அழைப்பை மக்களுக்கு மீண்டும் நினைவுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2020, 15:29