இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை 

போலி தேசியவாதத்தை நிறுத்துமாறு இந்திய அரசுக்கு ஆயர்கள்

நாட்டின் பொது நலனைக் கட்டியெழுப்புவதற்கு இடம்பெறும் பணிகளில் அனைவரோடும் ஒத்துழைப்பு வழங்கவும், உரையாடல் பாதையைத் தொடரவும் இந்திய ஆயர்கள் உறுதியளித்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில், பல்வேறு மத மரபுகள் மத்தியில் உரையாடல், ஒருவர் ஒருவரை மதித்தல் மற்றும், ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.

பெங்களூரு புனித யோவான் மருத்துவக் கல்லூரியில், இந்தியாவின் 174 மறைமாவட்டங்களைச் சார்ந்த ஏறத்தாழ 192 ஆயர்கள், தங்களின் 34வது ஆண்டு நிறையமர்வு ஆண்டுக் கூட்டத்தை, பிப்ரவரி 19, இப்புதனன்று நிறைவு செய்து, வெளியிட்ட இறுதி அறிக்கையில், இந்திய அரசு, போலி தேசியவாதத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் பொது நலனுக்கும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெறும் பணிகளில் அனைவரோடும் ஒத்துழைப்பு வழங்கவும், உரையாடல் பாதையைத் தொடரவும் உறுதியளித்துள்ள ஆயர்கள், குறுகிய மற்றும், பிளவைத் தூண்டும், தேசியவாத கலாச்சாரத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இயேசு கிறிஸ்துவுக்கும், நாட்டிற்கும் தங்களின் உறுதியான பிரமாணிக்கத்தை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, நாட்டின் அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள தேசியவாதத்திலிருந்து மாறுபட்ட தேசியவாத நடவடிக்கைகள் குறித்து இந்திய கத்தோலிக்க ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றியும் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், இந்திய குடிமகன் என்ற நிலையை நிர்ணயிப்பதற்கு, மதம், ஒரு கூறாக இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய அரசியலமைப்பில், அனைத்து குடிமக்களுக்கும், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும், மனித உடன்பிறந்தநிலைக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதைப் பாராட்டியுள்ள ஆயர்கள், எல்லா மதத்தினரும், ஒருவர் ஒருவரையும், மற்றவரின் மத மரபுகளையும் மதிக்கவும், அமைதி, நல்லிணக்கம் மற்றும், பொதுநலனுக்கு உழைப்பதில் ஒத்துழைப்பு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஒருவரின் மத மரபு மற்றும், கலாச்சார தனித்துவத்திற்கு ஒத்திணங்கும் வகையில், உரையாடலுக்குத் திறந்தமனம் கொண்டவர்களாய் வாழுமாறும், கருவில் வளரும் குழந்தைக்கு வாழ்வதற்கு உரிமை உண்டு என்றும், மனித வாழ்வு, தாயின் கருவறை முதல் இயற்கையான மரணம் அடையும்வரை மதிக்கப்படுமாறும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

பல்சமய உரையாடல் மற்றும், அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள், ஒப்புரவாக்கப்பட்ட சமுதாயத்திற்கு, திருஅவை, உரையாடல் பாதையில் தன்னை ஈடுபடுத்தும் என்ற உறுதியையும் ஆயர்கள் வழங்கியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2020, 15:21