திருத்தந்தை 12ம் பயஸ் திருத்தந்தை 12ம் பயஸ்  

சாம்பலில் பூத்த சரித்திரம்:20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-8

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள்,1831ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 16ம் கிரகரி அவர்களுக்குப்பின், திருப்பீடத் தலைமையகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தையாவார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 12ம் பயஸ் -1

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1939ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி இறைவனடி சேர்ந்தார். எனவே 1939ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி 62 கர்தினால்கள் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அமர்வைத் தொடங்கினார். அதற்கு அடுத்த நாள் மார்ச் 2ம் தேதி, கர்தினால் யுஜேனியோ பச்செல்லி (Eugenio Pacelli) அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12ம் பயஸ் என்ற பெயரை ஏற்ற கர்தினால் பச்செல்லி அவர்கள், அப்போது திருப்பீட செயலராகவும், திருஅவையின் Camerlengoவாகவும், அதாவது, திருப்பீடத்தின் சொத்துக்களையும், வருவாய்களையும் நிர்வாகம் செய்யும் பணியாளராகவும் இருந்தார். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் பிறந்த மார்ச் 2ம் தேதியன்றே, அவரின் 63வது வயதில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவ் அவையே, 20ம் நூற்றாண்டில் குறுகிய நாள்களில் நடைபெற்ற அவை எனச் சொல்லப்படுகிறது. திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள்,1831ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 16ம் கிரகரி அவர்களுக்குப்பின், திருப்பீடத் தலைமையகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தையாவார். அதோடு, இவர், 1731ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 13ம் இன்னோசென்ட் அவர்களுக்குப்பின் உரோம் நகரைச் சார்ந்த முதல் திருத்தந்தையுமாவார். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1958ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி வரை, அதாவது அவர் இறக்கும்வரை திருஅவையை வழிநடத்திச் சென்றார்.

திருத்தந்தையரோடு நெருங்கிய தொடர்பு

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1876ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி உரோம் நகரில், திருத்தந்தையரோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்த பக்திமிகு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவர் திருமுழுக்கில் யுஜேனியோ மரிய ஜூசப்பே ஜொவான்னி பச்செல்லி என்று திருநீராட்டப்பட்டார். இவரது தாத்தா மாற்கந்தோனியோ பச்செல்லி அவர்கள், பாப்பிறையின் நிதி அமைச்சகத்தில் நேரடி பொதுச் செயலராகவும், திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களுக்கு, 1851ம் ஆண்டு முதல், 1870ம் ஆண்டு வரை, உள்துறை செயலராகவும் பணியாற்றியதோடு, 1861ம் ஆண்டில் திருப்பீட சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ ஆரம்பிக்கப்படவும் உதவினார். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் தந்தை பிலிப்போ பச்செல்லி அவர்கள், பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையைச் சார்ந்தவர் மற்றும், இவர், திருமண விவகாரம் குறித்த திருஅவையின் உச்சநீதிமன்றமான ரோமன் ரோட்டாவின் தலைவராகப் பணியாற்றினார். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் சகோதரர் பிரான்செஸ்கோ பச்செல்லி அவர்கள், பொதுநிலை திருஅவை வழக்கறிஞர் மற்றும், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களுக்கு முக்கிய சட்ட ஆலோசகராக இருந்தார். இந்தப் பணியில் இவர், 1929ம் ஆண்டில், இலாத்தரன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு, இத்தாலிய தலைவர் பெனித்தோ முசோலினியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஒப்பந்தம் வழியாக, இத்தாலிய நிலப்பகுதியில் திருத்தந்தையர் எதிர்கொண்ட அதிகாரம் சார்ந்த பிரச்சனை (Roman Question) முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் உறவினர் எர்னெஸ்தோ பச்செல்லி அவர்கள், திருத்தந்தை 13ம் லியோ அவர்களுக்கு, நிதி விடயத்தில் முக்கிய ஆலோசகராகப் பணியாற்றினார். இவ்வாறு திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் குடும்பம், திருத்தந்தையருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

அறிவு புலமை

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இயேசு சபையினரின் உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் மெய்யியலும், புனித அப்பலோனியார் பாப்பிறை நிறுவனத்தில் இறையியலும் கற்றார். அவர், 1899ம் ஆண்டில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் அருள்பணியாளராகவும் திருப்பொழிவு செய்யப்பட்டார். இவரின் முனைவர் பட்ட ஆய்வு கட்டுரை சிறிய அளவு இருந்ததையும், இலத்தீனில் வாய்மொழி தேர்வில் அவர் வெளிப்படுத்திய புலமையையும் பாராட்டி விருதும் வழங்கப்பட்டது. இவர், 1901ம் ஆண்டில் திருப்பீட செயலகத்தின் துணை அலுவலகமான திருப்பீட வெளியுறவு விவகாரத் துறையில் சேர்ந்தார். 1904ம் ஆண்டில், “ஒப்பந்தங்களின் இயல்பும், அவை தற்காலிகமாக நிறுத்தப்படும்போது திருஅவை சட்டத்தின் செயல்பாடும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். 1908ம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற உலக திருநற்கருணை மாநாட்டில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்று, வின்ஸ்டன் சர்ச்சிலைச் சந்தித்தார். அரசர் 5ம் ஜார்ஜ் முடிசூட்டப்பட்ட விழாவிற்கு திருப்பீடத்தின் பிரதிநிதியாகச் சென்றார். 1917ம் ஆண்டில் பவேரியாவுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டாலும் இவர், ஜெர்மன் பேரரசு முழுவதற்குமே, திருப்பீடத் தூதராகப் பணியாற்றினார். 1930ம் ஆண்டில் திருப்பீடச் செயலராகவும், 1935ம் ஆண்டில், திருஅவையின் Camerlengoவாகவும் நியமிக்கப்பட்டார், திருத்தந்தை 12ம் பயஸ்.

திருஅவையில் பணிகள்

கர்தினால் பச்செல்லி அவர்கள், 1925ம் ஆண்டில், திருப்பீட தூதரகத்தை பெர்லின் நகருக்கு மாற்றி, திருப்பீட தூதராகப் பணியாற்றுகையில், ஜெர்மனியில் முளைத்துவந்த நாத்சி கருத்தியல்களின் சில கூறுகளைக் கண்டித்து நாற்பது உரைகள் ஆற்றினார். 1935ம் ஆண்டில், கொலோன் ஆயருக்கு எழுதிய கடிதத்தில், “லூசிஃபேர் தலைமை சாத்தானின் தற்பெருமையோடு போலி இறைவாக்கினர்கள்” என, நாத்சி கொள்கையாளர்களைச் சாடினார். அதற்கு இரு ஆண்டுகள் சென்று பாரிசில் ஆற்றிய உரையில், ஜெர்மனி, மிகச் சிறந்த மற்றும், சக்திவாய்ந்த நாடு, ஆனால் அந்நாட்டை ஆளும் தீய தலைவர்கள், இனப்பாகுபாடு என்ற கருத்தியலில், தவறான பாதைக்கு இட்டுச்செல்கின்றனர் என்று குறை கூறினார். கர்தினால் பச்செல்லி அவர்கள், திருப்பீட செயலராக, ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, யூக்கோஸ்லாவியா, போர்த்துக்கல் உட்பட பல ஐரோப்பிய மற்றும், இலத்தீன் அமெரிக்க நாடுகளோடு ஒப்பந்தங்கள் உருவாக உழைத்தார். இத்தாலியுடன் இலாத்தரன், நாத்சி ஜெர்மனிக்கும் திருப்பீடத்திற்கும் இடையே Reichskonkordat ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உழைத்தார். இவ்வாறு, திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன் பல முக்கிய பணிகளை ஆற்றியுள்ளார், திருத்தந்தை 12ம் பயஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2020, 11:55