மாஸ்கோவில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தலைமையேற்று நடத்தும் முதுபெரும் தந்தை கிரில் மாஸ்கோவில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தலைமையேற்று நடத்தும் முதுபெரும் தந்தை கிரில் 

முதுபெரும் தந்தை கிரில் - கிறிஸ்மஸ் செய்தி

குழந்தையாய் பிறந்த இயேசு, எவ்வித பாகுபாடும் இன்றி, அனைவரையும் அணைக்க வரும் வேளையில், நாம், பல்வேறு பிரிவுகளை உருவாக்கி வருகிறோம் - முதுபெரும் தந்தை கிரில்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொடுமையான வறுமையில், ஒரு குகையில் பிறந்த கிறிஸ்துவைக் கொண்டாடும் வேளையில், அதைவிடக் கொடுமையாக, பாவம், நம் உள்ளங்களை பாலைநிலமாக மாற்றுவதைக் குறித்து நாம் சிந்திக்கவேண்டும் என்று, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை, கிரில் அவர்கள், 2020ம் ஆண்டு கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

சனவரி 7, இச்செவ்வாயன்று, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையினர், கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடியதையொட்டி, முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், மனித குலத்தை ஒருங்கிணைக்க இயேசு வந்திருக்கும் வேளையில், மனிதர்களாகிய நாம் வளர்த்துவரும் பகைமையைக் குறித்து சிந்திக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின், ஆயர்கள், அருள்பணியாளர்கள் துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியில், குழந்தையாய் பிறந்த இயேசு எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரையும் அணைக்க வரும் வேளையில், நாம் பல்வேறு பிரிவுகளை உருவாக்கி வருகிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

குளிரிலும், வறுமையிலும் தன்னையே உட்படுத்தி பிறந்த இறைவனின் பிறப்பைக் கொண்டாடும்பொழுது, சுகங்களை மட்டுமே தேடிச் செல்லும் நம் மனநிலையை நாம் ஆய்வு செய்யவேண்டும் என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் விண்ணப்பித்துள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2020, 15:16