'மரியா, இறைவனின் தாய்' பெருவிழா 'மரியா, இறைவனின் தாய்' பெருவிழா 

சனவரி 01- புத்தாண்டு நாள், நாற்பெரும் விழா

சனவரி 1ம் தேதி, திருஅவை, ஒரு மாபெரும் விழாவைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. 'மரியா, இறைவனின் தாய்' என்பதே அம்மாபெரும் விழா.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

சனவரி 01- புத்தாண்டு நாள், நாற்பெரும் விழா

முப்பெரும் விழா என்பது தமிழகத்தில் அடிக்கடி கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு. சனவரி முதல் நாளான இன்று, நான்கு முக்கிய காரணங்கள், விழா கொண்டாட நம்மை அழைக்கின்றன. எனவே, இந்த நாளை நாம் நாற்பெரும் விழா என்று கூறலாம்.

கிரகோரியன் நாள்காட்டியின் படி, புதியதோர் ஆண்டின் முதல்நாள் இன்று. உலகின் பல நாடுகளில், பல கலாச்சாரங்களில் 2020ம் ஆண்டு இன்று துவங்குகிறது. நாற்பெரும் விழாவின் முதல் காரணம் இது.

டிசம்பர் 25ம் தேதி பெத்லகேம் என்ற ஊரில் பிறந்த ஒரு குழந்தைக்கு, எட்டாம் நாளான சனவரி 1ம் தேதி, ‘இயேசு’ என்ற பெயர் சூட்டப்பட்ட நாள் இது. (லூக்கா 2: 21) பிறந்த குழந்தைக்குப் பெயரிடுவது ஒரு முக்கிய விழா தானே.

உலக அமைதிக்காக செபிக்கும்படி கத்தோலிக்கத் திருஅவை குறித்துள்ள நாள், சனவரி முதல்நாள். திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள், ‘உலகில் அமைதி’ என்ற பொருள்படும், ‘Pacem in Terris’ என்ற திருமடலை, 1963ம் ஆண்டு வெளியிட்டார். அந்தத் திருமடலின் நினைவாக, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், உலக அமைதி நாளை, 1967ம் ஆண்டு உருவாக்கினார். அவரது விருப்பத்தின்படி, 1968ம் ஆண்டு, சனவரி 1ம் தேதி, முதல் உலக அமைதி நாள் சிறப்பிக்கபட்டது. இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 53வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அமைதி, நம்பிக்கையின் ஒரு பயணமாக..." என்ற தலைப்பில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். இச்செய்தியின் உப தலைப்பாக, உரையாடல், ஒப்புரவு மற்றும் சுற்றுச்சூழலையொட்டிய மனமாற்றம் என்ற மூன்று அம்சங்களையும் திருத்தந்தை இணைத்துள்ளார். உலக அமைதி, எட்டாததொரு கனவாகத் தோன்றினாலும், அந்தக் கனவு நனவாகவேண்டும் என்று செபிக்கும் உலக அமைதி நாள் நாற்பெரும் விழாவின் மூன்றாவது காரணம்.

இந்த மூன்று காரணங்களுக்கும் மேலாக, திருஅவை, இன்று, ஒரு மாபெரும் விழாவைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. 'மரியா, இறைவனின் தாய்' என்பதே அம்மாபெரும் விழா. இவ்விழாவைச் சிறப்பிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 1, இவ்வியாழன் காலை 10 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலியை முன்னின்று நடத்தினார். இத்திருப்பலியில், திருத்தந்தை வழங்கிய மறையுரையின் சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்:

மறையுரை சுருக்கம்

"காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனை, பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்." (கலா. 4:4). ஒரு பெண்ணின் உதரத்தில் கருவாகத் தோன்றி, ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு மாதமாக வளர்ச்சியடைந்ததன் வழியே, இறைவன் மனிதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். நம் இறைவனில் மனிதரின் சதை உள்ளது! இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே நிகழ்ந்த இந்த திருமண உறவை, ஆண்டின் முதல் நாளன்று நாம் கொண்டாடுகிறோம்.

பெண்ணிடம் பிறந்தவர். மனிதம் மீண்டும் பிறந்தது, பெண்ணிடமிருந்து துவங்கியது. பெண்கள், வாழ்வின் ஊற்றுகள். எனினும், அவர்கள் தொடர்ந்து, அடிபட்டு, பாலின வல்லுறவுக்கு உட்பட்டு, கருவில் வளரும் குழந்தையைக் கொல்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர். இன்றைய உலகில் பெண்மையும், தாய்மையும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள், பெண்ணிடமிருந்து பிறந்த கடவுளுக்கு எதிரான குற்றம்.

பெண்ணிடம் பிறந்தவர். வாழ்வைப் பேணிக்காக்கும் பண்பு, பெண்களுக்கு அதிகம் உண்டு. வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அவர்கள் உள்ளத்தில் ஏந்துவதால், அவர்களால் வாழ்வைப் பேணவும், காக்கவும் முடிகிறது. இதையே இன்று நற்செய்தியில் நாம் கேட்டோம். "மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்." (லூக். 2:19) உள்ளத்தில் இருத்துவது எப்போதும் மகிழ்வைத் தருவது அல்ல, இருந்தாலும், மரியா அதை தன் பழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால், அவரால் வாழ்வை பேணிக்காக்க முடிந்தது.

புத்தாண்டினை துவங்கும் இவ்வேளையில், நாம் நம்மையே இக்கேள்வி கேட்போம்: "என்னால், பிறரை என் உள்ளத்தால் பார்க்க முடிகிறதா? அவர்கள் மேல் அக்கறை கொள்ள முடிகிறதா? அனைத்திற்கும் மேலாக, ஆண்டவரை என் உள்ளத்தின் மையமாகக் கொண்டிருக்க முடிகிறதா?" வாழ்வின் மீது நமக்கு அக்கறை இருந்தால் மட்டுமே, அதை எவ்விதம் உள்ளத்தில் இருத்தி பாதுகாக்க முடியும் என்பதை அறிந்துகொள்வோம். அப்போதுதான், உலகில் நிலவும் அக்கறையற்ற நிலை மாறி, மற்றவர்களைப் பாதுகாக்கும் பண்பு வளரும். அமைதியின் இளவரசர், ஒரு பெண்ணிடமிருந்து பிறந்தார். பெண், அமைதியை மற்றவர்களுக்கு வழங்கும் வழியாக விளங்குகிறார்.

நம்பிக்கை கொண்ட அனைவரையும் இணைக்கும் இறைவனின் தாயை நாடி வந்திருக்கிறோம். ஓ அன்னையே, எங்கள் உள்ளங்களில் நம்பிக்கையை உருவாக்கும். ஒற்றுமையைக் கொணரும். மீட்பின் வாயிலாக விளங்கும் அன்னையே, இந்த ஆண்டினை உம்மிடம் நாங்கள் ஒப்படைக்கிறோம். அதை உமது உள்ளத்தில் இருத்தும். உம்மை நாங்கள் இறைவனின் அன்னையே, இறைவனின் அன்னையே, இறைவனின் அன்னையே என்று வாழ்த்துகிறோம்!

இத்திருப்பலியின் இறுதியில், புனித பேதுரு பெருங்கோவிலில் கூடியிருந்த மக்களுக்கு, திருத்தந்தை வழங்கிய ஆசீர், இந்த ஒலிபரப்பின் வழியே அனைவரையும் தற்போது வந்து சேருகிறது. (திருத்தந்தையின் ஆசீர்)

கிறிஸ்மஸ், மற்றும், புத்தாண்டு காலத்தில், நமக்கு நெருங்கியவர்கள், நம்மில் நல்ல தாக்கங்களை உருவாக்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்புகிறோம். வாழ்த்து மடல்கள், கடிதங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், ‘வாட்ஸ்ஸப்’ என்று, வாழ்த்துக்களைப் பரிமாற, எத்தனையோ வழிகளையும் பயன்படுத்துகிறோம். இந்த நன்னாளில், இறைவனுக்கும், நமக்கும் அன்னையாக விளங்கும் மரியாவுக்கு, ஒரு வாழ்த்து மடலை அனுப்பி, நம் உள்ளத்து உணர்வுகளைப் பகிர்வோம்:

எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மரியன்னையே,

நாங்கள் துவக்கியிருக்கும் 2020ம் ஆண்டில் நீர் எம்மோடு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று இறைவனின் தாயான உமக்கு நாங்கள் விழா எடுக்கிறோம். ஆனால், இறைவனின் தாயானதை உம்மால் கொண்டாட முடிந்ததா என்பது பெரும் கேள்வியே, இல்லையா?

நீர் அன்று வாழ்ந்தபோது உமது நாடு உரோமைய ஆதிக்கத்தில் துன்புற்றது. இன்றும் அப்பகுதியில் எந்நேரமும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. போர்சூழ்ந்த பூமியில் வாழ்வது யாருக்குமே எளிதல்ல. அதிலும் முக்கியமாக, உம்மைப் போன்ற இளம்பெண்களின் நிலை எவ்வளவு ஆபத்தானது என்பதை, இன்னும் இவ்வுலகம், பல கொடூரங்களின் வழியாக, எங்களுக்கு நினைவு படுத்திக்கொண்டே உள்ளது.

உமது குழந்தையைப் பெற்றெடுக்க, நிறைமாதக் கர்ப்பிணியான நீர், பெத்லகேம் செல்லும் கட்டாயத்திற்கு உள்ளானீர். காரணம், அதிகார வெறிகொண்ட உரோமைய அரசு, மக்கள் கணக்கெடுக்க விதித்த ஆணை. இந்திய மண்ணில், வாழ்வதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பதைத் தீர்மானிக்க, குடிமக்களைக் கணக்கெடுக்கும் சூழலை, ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சி உருவாக்கியுள்ளது. ஓரளவு ஒற்றுமையுடன் வாழ விரும்பும் இந்திய மக்களை, மதம், மொழி, இனம், சாதி என்ற பல்வேறு காரணங்களால் பிரித்துவிட முயற்சி செய்யும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கு நாங்கள் தகுந்த பதில் அளிக்க, எங்களுக்கு தெளிவையும், துணிவையும் தந்தருளும்.

கருவில் கடவுளைச் சுமந்தது முதல், கல்வாரியில் அவரைச் சிலுவைப் பலியாய் தந்தது வரை உமது மகனால் நீர் அடைந்தது பெரும்பாலும் வேதனைகளே அன்றி நிம்மதி அல்ல. வாழ்ந்த நாட்கள் பலவும் வசைகளையும், வலிகளையும் மட்டும் அனுபவித்த உமக்கு, கடந்த இருபது நூற்றாண்டுகளாய் கிடைத்துள்ள வாழ்த்துக்கள் வானுயர உம்மை உயர்த்தியுள்ளன.

"கறைபட்ட எமது குலத்தின் தனிப்பெரும் பெருமை நீர்" என்று ஆங்கிலக் கவிஞர் William Wordsworth உம்மைப்பற்றிச் சொன்னது உமது புகழ்கடலில் ஒரு துளியே. உமது புகழ்கடலில் நாங்களும் மூழ்கி மகிழ்கிறோம், பெருமைப்படுகிறோம்.

வாழ்க மரியே! வாழ்க எம் அன்னையே!

இப்படிக்கு,

உமது குழந்தைகளாய் பிறக்க கொடுத்து வைத்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2020, 15:56