புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்ந்தோர் 

புலம்பெயர்ந்தோரை மையப்படுத்தி கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம்

புனித பவுலும், அவரோடு பயணம் மேற்கொண்ட ஏனைய கைதிகளும், மற்றவரும் கடலில் எதிர்கொண்ட அதே துன்பங்களை இன்றும் பலர் எதிர்கொள்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சனவரி 18, இச்சனிக்கிழமையன்று துவங்கியுள்ள, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம், “அவர்கள் எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர்” என்ற தலைப்பில், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் துன்பநிலைகளை மையப்படுத்தி, கடைப்பிடிக்கப்படுகின்றது.

இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்திற்குரிய தலைப்பை, மால்ட்டா நாட்டு கத்தோலிக்க மற்றும், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் இணைந்து தயாரித்துள்ளனர்.

புனித பவுலடிகளார், கைதியாக, உரோம் நகருக்கு மேற்கொண்ட கப்பல் பயணத்தில் கப்பல் சேதமடைந்து, அவரும், அவரோடு இருந்தவர்களும் மால்ட்டா தீவு கடற்கரையை அடைந்தனர். அச்சமயத்தில் மால்ட்டா தீவு மக்கள், இப்பயணிகளிடம் மிகுந்த மனித நேயத்துடன் நடந்துகொண்ட நிகழ்வை மையப்படுத்தி இத்தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் மழை பெய்து குளிராயிருந்த காரணத்தால், மால்ட்டா தீவு மக்கள், தீ மூட்டி எங்கள் அனைவரையும் அருகே அழைத்துச் சென்று குளிர்காய உதவினர். மால்ட்டா தீவில் தங்கியிருந்த மூன்று மாதங்களும் அவர்கள் எங்களுக்கு மதிப்பு அளித்து, பல கொடைகளையும் தந்தார்கள் என்று பவுலடிகளார் கூறியதை, திருத்தூதர் பணிகள் நூல் பதிவு செய்துள்ளது.

இத்தலைப்பு பற்றி வத்திக்கான் செய்திகளிடம் பேசிய, அருள்பணி Hector Scerri அவர்கள், புனித பவுலும், அவரோடு பயணம் மேற்கொண்ட ஏனைய கைதிகளும், மற்றவரும் கடலில் எதிர்கொண்ட அதே துன்பங்களை இன்றும் பலர் எதிர்கொள்கின்றனர் என்று கூறினார்.

இம்மக்கள் இயற்கைப் பேரிடரால் மட்டுமன்றி, பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும், மனிதாபிமான பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர் என்று கூறிய, அருள்பணி Scerri அவர்கள், வருகிற எட்டு நாள்களும், ஒப்புரவு, ஒளி, நம்பிக்கை, எதிர்நோக்கு, துணிவு, உபசரிப்பு, மனமாற்றம், மனத்தாராளம் ஆகிய தலைப்புகளில் செபங்களும், சிந்தனைகளும் நடைபெறும் என்று கூறினார்.

இந்த செப வாரம் குறித்து பேசிய ஆங்லிக்கன் பேராயர் எர்னஸ்ட் அவர்கள், இச்செப வாரத்தில் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து செபிப்பது மட்டுமன்றி, அந்நியரை வரவேற்று, அவர்களை மாண்புடன் பராமரிக்கும் அன்புள்ள குழுமமாக உலகினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்.

கிறிஸ்தவ சபைகள் அனைத்தும், ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18ம் தேதி முதல், புனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25ம் தேதி வரை கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தைக் கடைப்பிடிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2020, 15:30