பிலிப்பீன்சில் புதிய வழி நற்செய்தி அறிவித்தல் பற்றிய கருத்தரங்கு பிலிப்பீன்சில் புதிய வழி நற்செய்தி அறிவித்தல் பற்றிய கருத்தரங்கு  

நாம் ஒருவர் ஒருவருக்கு கொடையாக விளங்க வேண்டும்

நாம் பெற்றுள்ள மாபெரும் கொடை இயேசு கிறிஸ்து, விலைமதிப்பில்லா அந்தக் கொடையை உலகுக்கு வழங்கவேண்டியவர்கள் நாம் - கர்தினால் தாக்லே

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனித சமுதாயத்திற்கு கொடையாக வழங்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நாம் ஒருவர் ஒருவருக்கு கொடையாக விளங்க வேண்டும் என்று, பிலிப்பீன்ஸ் நாட்டு கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், மனிலாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கூறினார்.

மனிலாவில், இச்செவ்வாய், புதன் (சனவரி 28,29,2020), ஆகிய இரு நாள்களில், புதிய வழி நற்செய்தி அறிவித்தல் பற்றி நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், மற்றவரை ஒரு கொடையாக வரவேற்க வேண்டும் என்று கூறினார்.

நாம் பெற்றுள்ள மாபெரும் கொடை இயேசு கிறிஸ்து என்றும், அந்தக் கொடை பலனைக் கொணர்கிறது என்றும், நாம் அவரின் தூய ஆவி மற்றும், பிரசன்னத்தின் கனிகள் என்றும், நாம், விலைமதிப்பில்லா அந்தக் கொடையை உலகுக்கு வழங்கவேண்டியவர்கள் என்றும், கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

வலைபின்னுபவர் என்ற உருவகத்தைப் பயன்படுத்தி உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், ஒருவர் ஒருவருக்கிடையே இருக்கவேண்டிய உறவை மையப்படுத்திப் பேசினார். பொறுமை, ஞானம் மற்றும், மனித உறவின் அருளோடு வாழ்வை அமைப்பவரே கிறிஸ்தவர் என்றும், இந்த உறவில் கலந்துரையாடல் முக்கியம் என்றும், கர்தினால் எடுத்துரைத்தார்.  

சனவரி 28,29 ஆகிய தேதிகளில், Quezon நகர அரங்கத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மனிலா உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த, பத்தாயிரத்திற்கு அதிகமான அருள்பணியாளர்கள், துறவிகள், இளைஞர்கள், மற்றும் வயதுவந்தோர் கலந்துகொண்டனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2020, 15:14