வறட்சியின் காரணமாக, ஜாம்பியாவின் புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி நீரின்றி கிடக்கும் காட்சி வறட்சியின் காரணமாக, ஜாம்பியாவின் புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி நீரின்றி கிடக்கும் காட்சி 

ஜாம்பியாவை அச்சுறுத்தும் பசிக்கொடுமை, ஆயர் கவலை

ஜாம்பியாவில், போதுமான மழை பெய்யாததால், 13 இலட்சம் குடும்பங்கள் கடுமையான பசிக்கொடுமையை எதிர்கொள்ளவுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜாம்பியாவில் வருகிற சனவரி மாதம் துவங்கி, அடுத்த அறுவடை காலம் வரை அந்நாட்டில் நிலவவுள்ள கடும் உணவு பற்றாக்குறை குறித்து, அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் George Cosmas Lungu.

1981ம் ஆண்டுக்குப்பின் தற்போது மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளதால், அந்நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் 19 இலட்சம் குடும்பங்கள் கடுமையான பசிக்கொடுமையை எதிர்கொள்வதாகப் பதிவு செய்திருந்தன, அந்த எண்ணிக்கை தற்போது 13 இலட்சமாக உயர்ந்துள்ளது என்று, Chipata மறைமாவட்ட ஆயரான Lungu அவர்கள், வத்திக்கான் செய்திகளிடம் கூறினார்.

ஜாம்பியத் திருஅவைத் தலைவர்களும், அரசு-சாரா அமைப்புகளும், அரசியல் தூதர்களும், தற்போதைய நிலவரத்தை, தேசிய பேரிடர் என்று அறிவிக்குமாறு, அரசை கேட்டுக்கொண்டுள்ளது பற்றிக் கூறிய ஆயர் Lungu அவர்கள், அவ்வாறு அறிவித்தால், உதவிகள் கிடைக்கும் என நம்புகிறோம் எனவும் கூறினார்.

நாங்கள் நினைத்திருந்ததைவிட நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், தேசிய பேரிடர் என்று வெளிப்படையாக அறிவிக்கும்போது, மக்களின் நலன் கருதி, உதவிகள் விரைவில் கிடைக்கும் என்றும், திருஅவைத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் ஆயர் கூறினார்.

தெற்கு ஆப்ரிக்க நாடாகிய ஜாம்பியாவில், புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உள்ளது. 1964ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த ஜாம்பியா, 1996ம் ஆண்டின் அரசியல் அமைப்பின்படி, ஒரு கிறிஸ்தவ நாடாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2019, 15:54