தமிழகத் திருஅவையில் இளைஞர் ஆண்டு தமிழகத் திருஅவையில் இளைஞர் ஆண்டு  

தமிழகத் திருஅவையில் இளைஞர் ஆண்டு - 2020

தமிழகத் திருஅவையில், ‘இளைஞரே, ஆற்றலோடு மாற்றம் நோக்கி…’ என்ற இலக்கின் அடிப்படையில் கொண்டாட உள்ள இளைஞர் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் ஒரு நோக்கத்தை மையப்படுத்திச் சிறப்பிக்கப்படும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

‘இளைஞரே, ஆற்றலோடு மாற்றம் நோக்கி…’ என்ற விருதுவாக்குடன் 2020ம் ஆண்டை, இளைஞர் ஆண்டாகச் சிறப்பிக்கத் தீர்மானித்துள்ளது, தமிழக ஆயர் பேரவை.

வத்திக்கானில் 2018ம் ஆண்டில் இளைஞர்களை மையப்படுத்தி நடைபெற்ற, ஆயர்கள் உலக மாமன்றத்தின் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்ற திருத்தூது ஊக்கவுரைச் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் விதமாக,  தமிழக ஆயர் பேரவை, 2020ம் ஆண்டை, இளைஞர் ஆண்டாகக் கொண்டாடவுள்ளது.

இந்த ஆண்டின் முக்கியத்துவத்தை இறைமக்களுக்கு உணர்த்துவதற்காக, தமிழக ஆயர் பேரவைத் தலைவர், மதுரைப் பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்கள் எழுதிய சுற்றுமடல், டிசம்பர் 15, இஞ்ஞாயிறன்று தமிழகத்தின் அனைத்து ஆலயங்களிலும் வாசிக்கப்படுகிறது.

இந்த இளைஞர் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் ஒரு நோக்கத்தை மையப்படுத்தி, ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கான செயல்பாடுகளோடு கொண்டாடலாம் என ஆயர்கள் தீர்மானித்துள்ளனர் என்று அச்சுற்றுமடலில் பேராயர் பாப்புசாமி அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளைஞர்கள் நல்வாழ்வுக்கு எடுத்துவரும் முயற்சிகள், தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்ட வரலாறு, தமிழகத் திருஅவை இளைஞர்களுக்கு ஆற்றிவரும் நற்பணிகள் போன்றவை, இச்சுற்றுமடலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. 

நவீன கலாச்சாரத்தில் தளர்ந்து, துவண்டு, சோர்ந்து போயுள்ள இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து, நம்பிக்கையூட்டி, இறைவன் அவர்களுக்கு விடுக்கும் அழைப்பினைத் தெளிந்துதேர்ந்து, துணிவுடன் பதில்மொழி நல்குவதற்காக, அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது இன்றியமையாதது என்பதனை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவாக்குத் தன்மையுடன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார் என்றும் அம்மடல் கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2019, 15:32