திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-2

புனித திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், தலைமைப்பணியை ஏற்ற நிகழ்வில், இவரின் கழுத்தில் இருந்த சிலுவை முலாம் பூசப்பட்டது என்பதை அறிந்த பணியாளர்கள் அதிர்ந்தனர். ஆனால் இவர் அமைதியாக, தன்னிடம் வேறு சிலுவை இல்லை எனக்கூறி, அதனையே அணிந்து சென்றார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை பத்தாம் பயஸ்

புனித திருத்தந்தை பத்தாம் பயஸ் (Giuseppe Melchiorre Sarto) அவர்கள், 20ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்ற முதல் திருத்தந்தை, மற்றும், 16ம் நூற்றாண்டுக்குப்பின், புனிதராக அறிவிக்கப்பட்ட (1954) முதல் திருத்தந்தையும் ஆவார். இவர், 1835ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி, வட இத்தாலியில், ஆஸ்ட்ரிய பேரரசின் கீழ் இருந்த வெனெத்தோ மாநிலத்தின் ரியெசெ எனும் ஊரில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், ஜூசப்பே மெல்கியோர் சார்த்தோ என்ற பெயரால் திருநீராட்டப்பட்டார். இவர், 1858ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்றபின், பங்குத்தந்தை, த்ரேவிசோ (Treviso) குருத்துவ கல்லூரியில் ஆன்மீக இயக்குனர், சான்சிலர் என, இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம், ஆழ்ந்த ஆன்மீக வாழ்வால் அனைவரையும் ஈர்த்தார். 1867ம் ஆண்டில், பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது, தன் உழைப்பால் கிடைத்த, நிதி மற்றும், பிறரிடம் நிதி கேட்டு பங்கு ஆலயத்தைச் சீரமைத்தார். 1870களில் வட இத்தாலியில், காலராவால் தாக்கப்பட்ட நோயளிகளுக்கு இவர் பணிவிடை செய்தார்.

1884ம் ஆண்டில், மாந்துவா மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்ட புனித திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், சீர்திருத்தப்பணிகளில் தாகம் கொண்டவராகத் திகழ்ந்தார். 1893ம் ஆண்டில், திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, வெனிஸ் நகருக்கு முதுபெரும்தந்தையாக அனுப்பப்பட்டார். திருஅவையில் உயர்ந்த பதவிகளைப் பெற்றாலும், அவர் எப்போதும், ஒரு பங்குத்தந்தையின் பணிகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தார். சிறார்க்கு மறைக்கல்விப் போதித்தல், திருப்பலி நிறைவேற்றுதல், ஒப்புரவு அருளடையாளத்தைக் கேட்டல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தினார். திருத்தந்தையாகப் பணியாற்றியபோதும், அவருடைய இதயம், எளிய பங்குத்தந்தையின் இதயமாக, கனிவு, நகைச்சுவை, நம்பகத்தன்மை, இரக்கம், கருணை போன்ற பண்புகளால், உலகின் அனைத்துத் திருப்பயணிகளின் உள்ளங்களிலும் இடம்பிடித்தார்.

திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், 1903ம் ஆண்டு இறைபதம் எய்தியதைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், வெனிஸ் நகர முதுபெரும்தந்தையாகப் பணியாற்றிய கர்தினால் ஜூசப்பே சார்த்தோ. திருத்தந்தை பத்தாம் பயஸ் என்ற பெயரை ஏற்ற இவர், முந்தைய திருத்தந்தையின் சமுதாயச் சீர்த்திருத்தங்களைத் தொடர்ந்து ஆற்றாமல், திருஅவை பிரச்சனைகள் மற்றும், உரோமன் கத்தோலிக்கத்தைப் பாதுகாப்பது பற்றிய விவகாரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவர், தலைமைப்பணியை ஏற்ற நிகழ்வில், இவரின் கழுத்தில் இருந்த சிலுவை முலாம் பூசப்பட்டது என்பதை அறிந்த பணியாளர்கள் அதிர்ந்தனர். ஆனால் இவர் அமைதியாக, தன்னிடம் வேறு சிலுவை இல்லை எனக்கூறி, அதனையே அணிந்து சென்றார். திருத்தந்தை எட்டாம் உர்பான் அவர்களால் கொண்டுவரப்பட்ட, திருத்தந்தை தனியாக உணவருந்தும் பழக்கத்தை இவர் நீக்கி, தன் நண்பர்களைத் தன்னோடு உணவருந்த அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்தவத்தின் அடிப்படைவாத கொள்கையுடைய திருத்தந்தை 10ம் பயஸ் அவர்கள், திருஅவையில் சில பாரம்பரிய விழுமியங்களைப் பறக்கணிக்கும் நவீனமயமாக்கலை நிறுத்தினார். 19ம் நூற்றாண்டு மெய்யியல், வரலாற்றியல் மற்றும், உளவியல் கோட்பாடுகளின் ஒளியில், பாரம்பரிய கத்தோலிக்கப் போதனைகளுக்கு விளக்கம் கொடுக்க முயற்சித்த, அவர் காலத்திய அறிவாளர் இயக்கத்தின் செயல்பாடுகளை நிறுத்தினார். இவர், குருத்துவக் கல்லூரிகளின் அனைத்து பேராசிரியர்கள் மற்றும், அருள்பணியாளர்கள், திருநிலைப்படுத்தப்படுவதற்குமுன், நவீனமயமாக்கலைப் புறக்கணிப்பதாக உறுதிமொழி எடுக்குமாறு ஆணையிட்டார். கிறிஸ்தவ சனநாயகவாதிகளுக்கு எதிராகவும், பிரான்சில், திருஅவையும், அரசும் தனித்து இயங்குவது குறித்தும் இவரின் நிலைப்பாடுகள் கசப்பான சர்ச்சைகளை உருவாக்கின. 1905ம் ஆண்டில் பிரான்சில், திருஅவை, அரசிடமிருந்து பிரிந்து செயல்படத் துவங்கியது. பெருமளவான பிரெஞ்ச் ஆயர்கள், இதனை நடைமுறைப்படுத்த விரும்பியவேளை, திருத்தந்தை 10ம் பயஸ் அவர்கள், 1906ம் ஆண்டில், பிரான்ஸ் அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், சிறாரிடம் தனிப்பட்ட அன்பு செலுத்தினார்.  இவரிடமிருந்த திருநற்கருணை பக்தியால், ஒவ்வொரு நாளும் நற்கருணை வாங்குவதை ஊக்குவித்தார். 1904ம் ஆண்டு வெளியிட்ட Ad Diem Illum என்ற திருமடலில், "கிறிஸ்துவில் எல்லாவற்றையும் புனிதமாக்குவதில்" அன்னை மரியாவுக்கு இருக்கும் பங்கினை எடுத்தியம்பினார். அன்னை மரியாவுக்கு, அன்னைக்குரிய வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்றார். அகிலத் திருஅவைக்கும், ஒரே சட்டத்தொகுப்பை உருவாக்கியதோடு, திருப்பீடத் துறைகளைச் சீரமைத்தார். குறிப்பாக குருத்துவக் கல்லூரிகளை மேற்பார்வையிடும் ஆயர்களின் பணியைப் புதிய சட்டங்களால் திருத்தினார். பல சிறிய குருத்துவக் கல்லூரிகளை ஒன்றிணைத்து, பெரிய குருத்துவ கல்லூரியாக உருவாக்கினார். புதிய குருத்துவ கல்வி முறையை உருவாக்கினார். அருள்பணியாளர்கள், பொதுப்பணித்துறை நிறுவனங்களை தலைமை தாங்கி நடத்த தடை விதித்தார். இவர், இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலேயே புதுமைகள் செய்துள்ளார். திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், 16 திருமடல்களை வெளியிட்டுள்ளார். இத்திருத்தந்தை, 11 ஆண்டுகள், 16 நாட்கள் தலைமைப் பணியாற்றி, 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி இறைவனடி சேர்ந்தார். இவர், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு முன்புவரை திருத்தந்தையரை அடக்கம் செய்யும்முன், உடல் பதனிடும்போது, உள்உறுப்புகளை நீக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இவர் அதை தடை செய்தார். அத்தடை இன்று வரை நடைமுறையில் உள்ளது. 

திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், 1951ம் ஆண்டு அருளாளராகவும், 1954ம் ஆண்டு புனிதராகவும், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2019, 15:10