"சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்கவேண்டும்" என்று இயேசு கூறினார். - லூக்கா 19:5 "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்கவேண்டும்" என்று இயேசு கூறினார். - லூக்கா 19:5 

பொதுக்காலம் - 31ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

தான் பிறந்ததுமுதல், பாவி, துரோகி என்ற அடைமொழிகளையே கேட்டு வாழ்ந்த சக்கேயு என்ற மனிதரை, இயேசு சந்தித்து, அவருக்கு மீட்பு வழங்கும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 31ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

நவம்பர் 1, வெள்ளியன்று, புனிதர் அனைவரின் திருநாளையும், நவம்பர் 2, சனிக்கிழமை, இறந்தோர் அனைவரின் நினைவுநாளையும் சிறப்பித்தோம். இவ்விரு நாள்களும், முன்பின் முரணாக வருகின்றனவோ? பொதுவாக, ஒருவர் இறந்தபின்னரே, அவர் புனிதராகக் கொண்டாடப்படுவார். எனவே, முதலில் இறந்தோரின் நினைவுநாளையும், பின்னர், புனிதர்களின் திருநாளையும் கொண்டாடுவதுதானே பொருத்தமாக இருக்கும்? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஒருவர் இறந்ததும், பொதுவாக, அவரைப்பற்றி நல்லவைகளே அதிகம் பேசப்படும். ஒருவர் இறந்தபின், மறைந்தபின் அவரைப்பற்றி நாம் கூறும் நல்லவற்றை, அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவரது முன்னிலையில், அவர் காதுபடக் கூறியிருந்தால், அவர் இன்னும் நல்ல வழியில், மன நிறைவோடு வாழ்ந்திருப்பார், அல்லவா?

இறந்தபின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, வாழும்போதே, ஒவ்வொருவருக்கும் நாம் அணிவித்தால், இவ்வுலகில், வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே. புனிதர்கள் விண்ணுலகில்தான் உருவாகவேண்டும் என்ற நியதி இல்லையே. தாங்கள் நல்லவர்கள் என்று, சூழ இருப்பவர்களால் போற்றப்படும் மனிதர்கள், புனிதர்களாக வாழ்ந்து, இவ்வுலகை விட்டு விடைபெற்று போக இயலும். இந்த எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்தில்தான், கத்தோலிக்கத் திருஅவை, புனிதர் அனைவரின் திருநாளுக்குப்பின், இறந்தோர் அனைவரின் நினைவுநாளைக் கொண்டாட நம்மை அழைக்கிறதோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

வாழும் காலத்தில் ஒருவரை புனிதராகக் கொண்டாடுவதற்கு மாறாக, அவரை மனிதராகவும் மதிக்காமல், அவர் பிறந்த குலம், செய்யும் தொழில் ஆகியவற்றின் அடிப்படையில், அவலமான பட்டங்கள் சுமத்தப்படும் கொடுமையைக் குறித்து சிந்திக்க இந்த ஞாயிறு நமக்கு ஓர் அழைப்பு விடப்பட்டுள்ளது. ஒருவர், பிறந்ததுமுதல், சூழ இருந்தோரிடமிருந்து கண்டனங்களை மட்டுமே பெற்றால், அவர் புனிதராக மாறமுடியாது. ஏன், மனிதராகக் கூட வாழ முடியாமல் போகும். தான் பிறந்ததுமுதல், பாவி, துரோகி என்ற அடைமொழிகளையே கேட்டு வாழ்ந்த சக்கேயு என்ற மனிதரை, இயேசு சந்தித்து, அவருக்கு மீட்பு வழங்கும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது - லூக்கா நற்செய்தி 19: 1-10. கருணையும், நம்பிக்கையும், ஒன்றை ஒன்று தழுவிக்கொள்ளும் இந்நிகழ்வு, வேறு எந்த நற்செய்தியிலும் தீட்டப்படாத அழகோவியம்.

‘இயேசு எரிகோவுக்குச் சென்று, அந்நகர் வழியே போய்க்கொண்டிருந்தார்’ என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இந்நிகழ்வை, ஒரு கற்பனைக் காட்சியாகக் காண முயல்வோம். இயேசு எரிகோ நகரில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரைச்சுற்றி, வழக்கம்போல், கூட்டம் அலைமோதியது. இந்தக் கூட்டத்தைப் பல்வேறு வழிகளில் சமாளித்து, இயேசுவை நெருங்கி, குணமடைந்தவர்கள் உண்டு. இயேசுவிடம் சென்றால், புதுமை நடக்கும் என்ற எதிபார்ப்புடன், இவர்கள் அவரை அணுகியவர்கள். இன்று நாம் சந்திக்கும் சக்கேயுவோ, எந்தப் புதுமையையும் எதிர்பார்க்காமல், இயேசுவிடம் வந்தவர். ஏதோ ஓர் இனம்புரியாத ஆர்வம், அவரை அந்தக் கூட்டத்திற்கு இழுத்து வந்தது. கூட்டத்தைச் சமாளிக்க, சக்கேயு, புதியதொரு வழியைத் தேடிக்கொண்டார்.

முதலில், சக்கேயு யார் என்பதை அறிந்துகொள்ள முயல்வோம். அவர், செல்வந்தர், வரிதண்டுவோரின் தலைவர், குள்ளமான மனிதர் என்ற மூன்று விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மூன்று விவரங்களும், ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை புரிந்துகொள்ள முயல்வோம். லூக்கா நற்செய்தி, சக்கேயுவை, அவர், இவர் என்று, மரியாதையுடன் குறிப்பிடுவதை, இஸ்ரயேல் மக்கள் கொஞ்சமும் விரும்பயிருக்க மாட்டார்கள். எரிகோ நகர மக்களைப் பொருத்தவரை, சக்கேயு, ‘அவர்’ அல்ல, ‘அவன்’. அவன் ஒரு பாவி, துரோகி.

தங்கள் சொந்த நாட்டிலேயே, உரோமையர்களுக்கு வரி செலுத்தவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்தனர், இஸ்ரயேல் மக்கள். எனவே, உரோமையர் மீது ஆழ்ந்த வெறுப்பு கொண்டிருந்தனர். அதைவிட, உரோமையருக்கு வரி வசூல் செய்து கொடுத்த யூதர்கள் மீது அதிக வெறுப்பு கொண்டு, அவர்களை, பாவிகள், துரோகிகள், புல்லுருவிகள், நாசக்காரர்கள் என்ற பல பழிச்சொற்களால் தினமும் அர்ச்சித்தனர்.

இத்தகையப் பழிச்சொற்களுக்கு உள்ளான வரிவசூலிக்கும் குடும்பத்தில் சக்கேயு பிறந்திருக்க வேண்டும். இந்தத் தொழிலை அவர் தானாகவே தேர்ந்தெடுத்திருக்கலாம் அல்லவா? என்னைப் பொருத்தவரை, சக்கேயு, இந்தக் குடும்பத்தில் பிறந்தவர். நான் அவ்வாறு கூறுவதற்குக் காரணம், சக்கேயு குள்ளமாய் இருந்தார் என்ற குறிப்பு. வரி வசூலிப்பவர் குடும்பத்தில் பிறப்பதற்கும், குள்ளமாய் இருப்பதற்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழலாம். சக்கேயு, பிறந்தது முதல், மற்றவர்களின் வெறுப்புக்கும், கேலிக்கும் ஆளானவர். அதனால், அவரால் வளர முடியவில்லை. சமுதாயம், அவரை, பாவி, துரோகி என்ற முத்திரைகளால் குத்திக்கொண்டே (குட்டிக்கொண்டே) இருந்ததால், குனிந்து, குனிந்து, குள்ளமாய்ப் போனார்.

“இயேசு யார் என்று பார்க்க சக்கேயு விரும்பினார்” என்று நற்செய்தி கூறுகிறது. இது வெறும் ஆர்வக்கோளாறு, ஒரு பார்வையாளரின் மனநிலை. சக்கேயு வாழ்ந்த மாடி வீட்டு பக்கம் இயேசு சென்றிருந்தால், மாடியில், நாற்காலியில், கால் மேல் கால் போட்டு அமர்ந்து, இயேசு தன் வீட்டைக் கடந்து போவதை அவர் பார்த்திருக்கலாம். ஆனால், அதற்கு வழி இல்லை. இயேசு சுற்றி வந்த வீதிகள் எல்லாம், ஏழைகள் வாழும் பகுதிளாக இருந்தன. தன் வீட்டுப் பக்கம் இயேசு வரமாட்டார் என்று தீர்மானித்த சக்கேயு, தன்னுடை தன்மானத்தை, தற்பெருமையை, ஓரம் கட்டிவிட்டு, இயேசுவைத் தேடிச்சென்றார். வெறும் ஆர்வம்தான், அவரை, இயேசுவிடம் கொண்டுவந்தது என்றாலும், மீட்பின் முதல் படிகளில் சக்கேயு ஏற ஆரம்பித்துவிட்டார். தற்பெருமைக்கு மூட்டை கட்டிவிட்டு, ஒரு மரமேறி அமர்ந்தார்... இது, சக்கேயுவின் பயணம்.

இனி, இயேசுவின் பயணம்...

எரிகோ வீதிகளில் இயேசு நடந்து சென்றபோது, நிமிர்ந்து பார்த்தார். தூரத்தில், ஒரு மரத்தின் மீது, நடுத்தர வயதுள்ள ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்த இயேசுவுக்கு வியப்பு. சிறுவர்கள் மரமேறி அமர்ந்திருப்பது, இயல்பான நிகழ்வு. இந்த ஆள், ஏறக்குறைய, 30 அல்லது 40 வயதானவர்... இவர் ஏன் மரமேறியிருக்கிறார்? ஒருவேளை மனநிலை சரியில்லாதவரோ? அப்படியும் தெரியவில்லை. அவர் உடையைப் பார்த்தால், நல்ல வசதி படைத்தவர்போல் தெரிகிறது. பின் ஏன் மரமேறியிருக்கிறார்?... இத்தகைய எண்ணங்கள், இயேசுவின் மனதில் எழுந்திருக்கும்.

இயேசுவுக்கு, அவரைப்பற்றி அறிய ஆர்வம் உண்டானது. அருகில் இருந்தவர்களிடம், அவர் யார் என்று கேட்டார். கூட்டத்தில் ஒரு சிலர், இயேசு காட்டிய மனிதரைப் பார்த்தனர். கோபம், வெறுப்பு, கேலி... அவர்கள் பதிலில் வெளிப்பட்டன. "ஓ, அவனா? அவன் ஒரு பாவி, துரோகி" என்று, தங்களிடம் தயாராக இருந்த முத்திரைகளைக் குத்தினர். இயேசு அந்தப் முத்திரைகளை ஒதுக்கிவிட்டு, அவர் பெயரைக் கேட்டார். யாருக்கும் அவரது பெயர் நினைவில் இல்லை.

'சக்கேயு' என்ற பெயருக்கு, எபிரேய மொழியில், 'தூய்மை' அல்லது, 'புனிதம்' என்று பொருள். இந்தப் பெயரை, நற்செய்தியாளர் லூக்கா நம் கதை நாயகனுக்கு வழங்கினாரா அல்லது, அதுவே அவரது இயற்பெயரா என்பது தெளிவில்லை. எது, எப்படியாயினும், 'தூய்மை' அல்லது, 'புனிதம்' என்று அழகிய பொருள் கொண்ட பெயர் சூட்டப்பட்ட ஒரு குழந்தை, வளர, வளர, வேறு பல தேவையற்ற கண்டனப் பெயர்களைத் தாங்க வேண்டியிருந்தது.

பிறந்ததுமுதல், பாவி, துரோகி என்று அடைமொழிகளாலேயே அவரை அழைத்துவந்ததால், அவருடைய இயற்பெயர் யாருக்கும் நினைவில் இல்லை. இயேசுவும் விடுவதாக இல்லை. மீண்டும், மீண்டும் பெயரைக் கேட்கிறார். தங்கள் ஞாபகச்சக்தியைக் கசக்கிப் பிழிந்து, இறுதியாக, "சக்கேயு" என்று சொல்கின்றனர். இயேசு, அந்த மரத்திற்குக் கீழ் வந்தவுடன், மேலே பார்த்து, அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார். புதுமையொன்று ஆரம்பமானது.

மக்கள் தன்னை வெறுப்போடு அழைத்த அடைமொழிகளைக் கேட்டுக் கேட்டு, தன் பெயரை, தானே மறந்து போயிருந்த சக்கேயுவுக்கு, தன்னைப் பெயர் சொல்லி அழைத்த இயேசுவின் சொற்கள், உயிரூட்டின. மறுமுறை பிறந்ததுபோல், மீண்டும் ஒருமுறை திருமுழுக்கு பெற்றதுபோல் உணர்ந்தார். அவர் உள்ளத்தில் கட்டப்பட்டிருந்த சிறைகள் திறந்தன; அவர் மீது குத்தப்பட்ட முத்திரைகள் என்ற தளைகள் அறுந்தன.

மற்றவர்களை, பெயர் சொல்லி அழைக்கும்போது, உறவுகள் ஆழப்படுவதை நாம் உணர்ந்திருக்கிறோம். முன் பின் தெரியாத ஒருவர், அதுவும், தான் பிறந்த நேரம் முதல் தன்னைப் பழிச்சொற்களால் வதைத்து வந்த தன் யூத குலத்தைச் சார்ந்த ஒருவர், தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயு மனமாற்றம் பெற்றார். இந்த மனமாற்றத்தை, சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.

விவிலியம், கிறிஸ்தவ பாரம்பரியம் இவற்றில், மனம் மாறியவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். சக்கேயுவின் மனமாற்றத்தில் ஒரு தனி சிறப்பு உண்டு. "ஆண்டவரே, இனி நான் நல்லவனாக இருப்பேன். யாரையும் ஏமாற்ற மாட்டேன். தான, தர்மம் செய்வேன்" என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம், சக்கேயு. அதையும் மனமாற்றம் என்று சொல்லியிருப்போம். ஆனால், சக்கேயுவின் கூற்று, இவற்றை விட, மிகத் தெளிவாக இருந்தது. "ஆண்டவரே, என் உடமைகளில் பாதியை நான் ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். யாரையாவது ஏமாற்றி, எதையாவது பறித்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பி கொடுத்து விடுகிறேன்." - லூக்கா 19: 8

பாதி சொத்து ஏழைகளுக்கு... ஏமாற்றியதற்கு நான்கு மடங்கு பரிகாரம்.

இச்சொற்களை, சக்கேயு, விருந்தின்போது, 'எழுந்து நின்று' சொன்னதாக, நற்செய்தி சொல்கிறது. இயேசுவிடம், தனிப்பட்ட விதத்தில், முணுமுணுக்கப்பட்ட வார்த்தைகள் அல்ல... கூடியிருந்த ஊர்மக்கள், விருந்தினர்களுக்கு முன் கொடுக்கப்பட்ட வாக்குறுதி. சக்கேயு, இந்த வார்த்தைகளை, 'எழுந்து நின்று' சொன்னபோது உடல் அளவில் இன்னும் குள்ளமாகத் தோன்றியிருக்கலாம். ஆனால், மனதளவில் உயர்ந்திருந்தார். முற்றிலும் உருமாற்றம் பெற்றார். தன்னுடையப் பெயரைச் சொல்லி இயேசு அழைத்த அந்த பரிவும், அன்பும் இந்த மாற்றத்தை உருவாக்கின. சக்கேயு, இயேசுவின் மனதில் உயர்ந்த்தோர் இடம் பிடித்தார். எனவேதான், இயேசு, "இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று." என்று ஆணித்தரமாகக் கூறினார்.

கடவுள், பாவிகள் மீது கொள்ளும் இரக்கத்தை, இன்றைய முதல் வாசகம் அழகாகக் கூறியுள்ளது:

சாலமோனின் ஞானம் 11: 22-12: 2

ஆண்டவரே,... நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்: மனிதர்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்தும் பாராமல் இருக்கின்றீர்... தவறு செய்பவர்களைச் சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்: அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்: ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.

இதைத்தான் இயேசு இன்று நற்செய்தியில் செய்திருக்கிறார். "நேர்மையற்ற மனிதராய் சக்கேயு மரம் ஏறினார். புனிதராய் அவரை மரத்தினின்று இறக்கினார் இயேசு."

பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம்: ஒருவரை உண்மையில் மாற்ற வேண்டுமானால், ஒருவரது உண்மை அழகைப் பார்க்க வேண்டுமானால், அவர் மீது நாம் வழக்கமாகச் சுமத்தும் அடைமொழிகளை, கண்டன அட்டைகளை கிழித்தெறிந்துவிட்டு, உள்ளார்ந்த மதிப்புடன், அவரை, பெயர் சொல்லி அழைப்போம். அவர் உருமாறும் அழகை, புதுமையைக் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2019, 14:47