ஈராக்கில் போராட்டம் ஈராக்கில் போராட்டம் 

போராடுவோருக்கு ஆதரவாக கிறிஸ்தவத் தலைவர்கள்

ஈராக் நாட்டில் அமைதியான முறையில் தங்கள் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் மக்களுடன் கிறிஸ்தவ சமுதாயம் முழுமையாக தன்னையே இணைத்துக் கொள்கிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் அமைதியான முறையில் தங்கள் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் மக்களுடன் கிறிஸ்தவ சமுதாயம் முழுமையாக தன்னையே இணைத்துக் கொள்கிறது என்று, அந்நாட்டில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்களின் அழைப்பின் பேரில், பாக்தாத்தின் கல்தேய வழிபாட்டு முறை தலைமை இல்லத்தில் ஒன்று கூடிய கிறிஸ்தவத் தலைவர்கள், அக்டோபர் 29, இச்செவ்வாயன்று மாலை இவ்வறிக்கையை வெளியிட்டனர்.

வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, நலவாழ்வு போன்ற உண்மையானத் தேவைகளை முன்னிறுத்தியும், ஊழலை எதிர்த்தும் போராடும் மக்கள், குறிப்பாக இளையோர், அனைவரோடும் தாங்கள் இணைந்திருப்பதாக, கிறிஸ்தவத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ஈராக்கின் எதிர்காலத்திற்காக போராடும் இந்தத் தலைமுறையினரையும், தங்கள் வேறுபாடுகளை மறந்து, அவர்கள் அனைவரும் இணைந்து போராடுவதையும், தாங்கள் தலைவணங்கி மதிப்பதாக, இத்தலைவர்களின் அறிக்கை கூறுகிறது.

இந்தப் போராட்டத்தில் காயமடைந்துள்ள போராளிகள், மற்றும் பாதுகாப்புத் துறையின் உறுப்பினர்கள் அனைவரும் விரைவில் குணமடையவேண்டுமென்றும், அமைதியான முறையில் மக்கள் எழுப்பும் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டுமென்றும், இத்தலைவர்கள் தங்கள் செபங்களை உறுதி செய்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2019, 15:46