சிலே நாட்டில்  அரசுக்கு எதிராக போராட்டங்கள் சிலே நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் 

சிலே நாட்டு அமைதிக்காக ஆயர்களின் 2வது அறிக்கை

நாட்டு மக்களின் மரணத்தாலும், மக்களின் மாண்பை மிதிப்பதாலும், நாட்டின் ஒற்றுமை கட்டியெழுப்பப்பட்ட முடியாது - சிலே ஆயர்களின் அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிலே நாட்டில் நிகழ்ந்துவரும் வன்முறையான போராட்டங்கள் முடிவுக்கு வரவேண்டுமென, அந்நாட்டு ஆயர்கள் இரண்டாவது முறையாக விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. 

நாட்டு மக்களின் மரணத்தாலும், மக்களின் மாண்பை மிதிப்பதாலும், நாட்டின் ஒற்றுமை கட்டியெழுப்பப்பட்ட முடியாது என்று கூறும் ஆயர்களின் அறிக்கை, இந்த போராட்டத்தைத் தீர்க்கும் பெரும் பொறுப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகளைச் சாரும் என்று கூறியுள்ளது.

இப்போராட்டத்தில் தங்கள் உயிரை இழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு தங்கள் அனுதாபங்களையும், செபங்களையும் ஒப்படைக்கும் சிலே ஆயர்கள், இந்தப் போராட்டத்தில் மக்களின் நலனை மனதில் கொண்டு துணிவுடன் பணியாற்றிய அனைவருக்கும், தங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

நடைபெற்றுவரும் போராட்டம், மிகச் சிக்கலானது என்றும், இதற்குத் தேவையான தீர்வு, அடிப்படையான மாற்றங்களிலும், அறநெறி மதிப்பீடுகளிலும் வெளிப்படவேண்டும் என்றும், San José di Temuco மறைமாவட்டத்தின் ஆயர் Héctor Vargas அவர்கள், ஃபீதேஸ் செய்திக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சிலே நாட்டில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், அந்நாடு இயல்பு நிலைக்குத் திரும்பவேண்டும் என்ற கருத்துடன், இச்செவ்வாய் முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. (ICN / Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2019, 15:42