பிரேசில் பகுதி அமேசான் காடுகளில் உருவாகியுள்ள தீ  பிரேசில் பகுதி அமேசான் காடுகளில் உருவாகியுள்ள தீ  

அமேசான் தீ விபத்து, ஓர் உலக நெருக்கடி

தீயினால் பற்றியெரியும் அமேசான் அழிவுக்கு, இறைவன் முன்னிலையில், நாம் அனைவருமே, பதிலிருக்கும் கடமையைக் கொண்டுள்ளோம் - கிறிஸ்தவ சபைகளின் உலக அவைத் தலைமைச் செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் காடுகளில் உருவாகியுள்ள தீ விபத்து, ஒரு சில நாடுகளின் நெருக்கடி மட்டுமல்ல, இது, உலக நெருக்கடி என்று, அனைத்து கிறிஸ்தவ சபைகளின் உலக அவைத் தலைமைச் செயலர், Olav Fykse Tveit அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வுலகின், மற்றும், இயற்கையின் கருவூலங்கள் அழிகின்றன என்பதோடு, நாம் அனைவருமே, இந்த அழிவுக்கு இறைவன் முன்னிலையில் பதிலிருக்கும் கடமையைக் கொண்டுள்ளோம் என்று, Tveit அவர்களின் அறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது.

30 இலட்சம் தாவர வகைகளுக்கும், விலகினங்களுக்கும் இல்லமாக விளங்கும் அமேசான் காடுகளில், பிரேசில் பகுதியில் மட்டும், கடந்த ஆண்டைக்காட்டிலும், இவ்வாண்டு, 87 விழுக்காடு, அதிக அளவு தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்று, செயற்கைக் கோள்கள் வழியே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

10 இலட்சத்திற்கும் அதிகமான பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் அமேசான் காடுகள், பொருளாதாரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு சில முடிவுகளால் இன்று பற்றியெறிந்து வருகிறது என்று, ஜெர்மனியின் எவஞ்செலிக்கல் சபையின் தலைவர், ஆயர் Heinrich Bedford-Strohm அவர்கள் கூறியுள்ளார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2019, 15:08