அமெரிக்காவில் விஷ ஊசி ஏற்றிக் கொல்வதற்கு பயன்படுத்தப்படும் படுக்கை அமெரிக்காவில் விஷ ஊசி ஏற்றிக் கொல்வதற்கு பயன்படுத்தப்படும் படுக்கை 

மரண தண்டனையை மீண்டும் துவங்குவதற்கு எதிராக ஆயர்கள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நீதித் துறை மரண தண்டனை குறித்து அறிவித்துள்ள முடிவை மீண்டும் மாற்றவேண்டும் என்பது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர்கள் விடுக்கும் அவசரமான வேண்டுகோள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில், மரண தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று அரசின் நீதித்துறை அறிவித்துள்ளதை, அந்நாட்டு ஆயர்கள் கண்டனம் செய்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனைகள், இவ்வாண்டு, டிசம்பர் மாதம் முதல் நிறைவேற்றப்படும் என்று, நீதித்துறை தலைவர், வில்லியம் பார் அவர்கள், கடந்த வியாழனன்று அறிவித்ததையடுத்து, ஆயர் பேரவை சார்பாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐ.நா. அவையில் வழங்கிய உரையில், உலகெங்கும் மரண தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளை, ஆயர்கள், தங்கள் அறிக்கையில் நினைவுறுத்தியுள்ளனர்.

நீதியின் அடிப்படையில் மனிதர்களுக்கு தண்டனை வழங்குவது அவசியம் என்றாலும், அத்தண்டனை, நபிக்கையைச் சிதைக்கும் தண்டனையாக இருக்கக்கூடாது என்று, திருத்தந்தை கூறியுள்ளதை, ஆயர்களின் அறிக்கை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், மனித உயிரும் மனித மாண்பும் விலைமதிப்பற்றவை என்ற காரணத்தால், மரண தண்டனை தன்னிலேயே தவறானது என்று, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி கூறுவதையும், ஆயர்கள், தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நீதித் துறை அறிவித்துள்ள முடிவை மீண்டும் மாற்றவேண்டும் என்பது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர்கள் விடுக்கும் அவசரமான வேண்டுகோள் என்று ஆயர்களின் சார்பாக அறிக்கையை விடுத்துள்ள ஆயர் Frank Dewane. (USCCB)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2019, 15:07