ஜெர்மனியில் அமைதிக்காக மதங்களின் கூட்டம் ஜெர்மனியில் அமைதிக்காக மதங்களின் கூட்டம் 

ஜெர்மனியில், அமைதிக்காக மதங்களின் உலகளாவிய கூட்டம்

அமைதிக்காக மதங்களின் 10வது உலகளாவிய கூட்டத்தில், 17 மதங்களின் முக்கிய பிரதிநிதிகள் உட்பட, பொது நலனில் அக்கறையுள்ள ஏறத்தாழ 900 பேர் கலந்துகொள்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

‘நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில், ஜெர்மனியின் Lindau நகரில், ஆகஸ்ட் 20, இச்செவ்வாயன்று, அமைதிக்காக மதங்களின் பத்தாவது உலகளாவிய கூட்டம் தொடங்கியுள்ளது.

அமைதிக்காக மதங்களின் 10வது உலகளாவிய கூட்டத்தில், 17 மதங்களின் முக்கிய பிரதிநிதிகள், அரசுகளின் பிரதிநிதிகள், அரசு-சாரா மற்றும், பொதுமக்கள் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என, பொது நலனில் அக்கறையுள்ள ஏறத்தாழ 900 பேர் கலந்துகொள்கின்றனர்

ஆகஸ்ட் 23, வருகிற வெள்ளியன்று நிறைவடையும் இக்கூட்டத்தில், இப்பூமியைப் பாதுகாப்பதற்கு, பல்சமய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும், புதிய உலக அவை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியை ஊக்குவிப்பதற்கு, மதங்கள் மத்தியில் ஒத்துழைப்பை உருவாக்குதல், வன்முறை மற்றும் போர்களால் நசுக்கப்பட்டுள்ள நாடுகளிலும், காங்கோ சனநாயக குடியரசு, தென் சூடான், வட கொரியா, தென் கொரியா, மியான்மார் ஆகிய நாடுகளிலும், பல்சமயக் குழு அமைதிக்கு உதவுதல் போன்ற தலைப்புகளிலும், இக்கூட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

‘அமைதிக்காக மதங்கள்’ என்ற உலகளாவிய அமைப்பு, 1970ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது, பல்வேறு கண்டங்களிலுள்ள, சமயத் தலைவர்களின் முக்கிய பிரதிநிதிகள், இன்னும், 90க்கும் அதிகமான தேசிய குழுக்கள், பல்சமய இளையோர் அமைப்பு, மற்றும், மதம் சார்ந்த பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. மேலும், 2013ம் ஆண்டில் வியன்னாவில் நடைபெற்ற, அமைதிக்காக மதங்களின் ஒன்பதாவது கூட்டத்தில், 600 பேர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2019, 15:10