திருத்தந்தையைச் சந்தித்த தென் சூடான் தலைவர்கள் - கோப்புப் படம் திருத்தந்தையைச் சந்தித்த தென் சூடான் தலைவர்கள் - கோப்புப் படம் 

தென் சூடான் கிறிஸ்தவ சபைகளின் முதல் பேரவை

மத்திய கிழக்கு ஆப்ரிக்க நாடான தென் சூடான், 2011ம் ஆண்டில் சுதந்திர நாடாக உருவெடுத்தது. உலகின் இளைய நாடான இங்கு, ஏறக்குறைய பாதிப்பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்

மேரி தெரேசா- வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவர்களையும், இயற்கையை வழிபடுவோரையும் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் தென் சூடான் நாடு 2011ம் ஆண்டில், சுதந்திரம் பெற்றபின், அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் இணைந்து, இவ்வாரத்தில், முதன்முறையாக பொதுப் பேரவை ஒன்றை நடத்தியுள்ளன.

“மன்னிப்பின் வல்லமை: நொறுங்குண்ட சமுதாயத்தில் குணப்படுத்தும் செய்திகள்” என்ற தலைப்பில், ஆகஸ்ட் 26, இத்திங்களன்று துவங்கிய இந்த நான்கு நாள்கள் பேரவையில், கத்தோலிக்கத் திருஅவையின் சார்பில், அமைதி நடவடிக்கைகளுக்குப் பெயர்பெற்ற, Gulu பேராயர் John Baptist Odama அவர்கள் கலந்துகொண்டார்.

கடந்த காலத்தில், தென் சூடானின் அமைதிக்காக கிறிஸ்தவ சபைகள் இணைந்து மேற்கொண்ட அமைதி நடவடிக்கைகள் பற்றி அலசி ஆராய்ந்த இப்பேரவையில், ஆயுத மோதல்களால் துன்புற்றுள்ள சமுதாயத்தில், மக்களிடையே ஒன்றிப்பு, அன்பு மற்றும் மன்னிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பற்றியும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

அந்நாட்டில், பாலியல் மற்றும் பாலினப் பாகுபாடு சார்ந்த வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து, கடந்த வாரத்தில் ஐ.நா. நிறுவனம் குறிப்பிட்டது பற்றியும் இப்பேரவையில் பரிசீலிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2019, 16:03