புனித அன்னை தெரேசாவின் 109வது பிறந்தநாள் புனித அன்னை தெரேசாவின் 109வது பிறந்தநாள் 

புனித அன்னை தெரேசாவின் 109வது பிறந்தநாள்

தன் பணிகள் வழியே இயேசுவை பிறருக்கு வழங்குவதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்த அன்னை தெரேசா, பணிவாழ்வில் நாமும் முழு ஆர்வத்துடன் ஈடுபட நமக்கு அழைப்பு விடுக்கிறார் - கொல்கத்தா பேராயர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித அன்னை தெரேசா அவர்களால் உருவாக்கப்பட்ட பிறரன்பு மறைபரப்புப் பணியாளர்கள் சபையைச் சேர்ந்த துறவியர், ஆகஸ்ட் 26, கடந்த திங்களன்று, அன்னை தெரேசா அவர்களின் 109வது பிறந்தநாளை சிறப்பித்தனர்.

கொல்கத்தாவில், புனித அன்னை தெரேசா அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கருகே, கொல்கத்தா பேராயர் தாமஸ் டி'சூசா அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் துவங்கியது.

தன் பணிகள் வழியே, இயேசுவை, பிறருக்கு வழங்குவதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்த அன்னை தெரேசா, பணிவாழ்வில் நாமும் முழு ஆர்வத்துடன் ஈடுபட நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்று, பேராயர் டி'சூசா அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

நமது பணிகளில் பிரமாணிக்கமாக இருப்பதே முக்கியம், பணிகளில் வெற்றியடைவது அல்ல என்று அன்னை தெரேசா அவர்கள் அடிக்கடி கூறிய சொற்களை, பிறரன்பு மறைபரப்புப் பணியாளர்கள் சபையின் உலகத் தலைவர், அருள் சகோதரி மேரி பிரேமா அவர்கள் நினைவுகூர்ந்தார்.

அன்னை தெரேசா அவர்களால் உருவாக்கப்பட்ட பிறரன்பு மறைபரப்புப் பணியாளர்கள் சபையில் பணியாற்றும் 4,500க்கும் அதிகமான அருள் சகோதரிகள், 136 நாடுகளில் 700க்கும் அதிகமான இல்லங்களில் அன்னையின் பிறந்தநாளைக் கொண்டாடினர் என்று UCA செய்தி கூறுகிறது.

1910ம் ஆண்டு, வட மாசிடோனியாவின் தலைநகர் Skopjeவில் பிறந்த அன்னை தெரேசா, 1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி இறையடி சேர்ந்தார். இவர் மரணமடைந்த ஆறாம் ஆண்டிலேயே, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், 2003ம் ஆண்டு, அக்டோபர் 19ம் தேதி, இவரை, அருளாளராக உயர்த்தினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி, 2016ம் ஆண்டு, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட வேளையில், செப்டம்பர் 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் அன்னை தெரேசாவை, புனிதராக உயர்த்தினார்.

புனித அன்னை தெரேசா அவர்களின் திருநாள் கொண்டாடப்படும் செப்டம்பர் 5ம் தேதியை, அனைத்துலக பிறரன்பு நாள் என்று ஐ.நா. அவை 2012ம் ஆண்டு அறிவித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2019, 15:11