தெற்கு ஆசிய பிரான்சிஸ்கன் துறவிகள் கூட்டமைப்பு தெற்கு ஆசிய பிரான்சிஸ்கன் துறவிகள் கூட்டமைப்பு 

பிரான்சிஸ்கன் துறவு சபைகளின் பத்து-புள்ளி செயல்திட்டம்

அசிசி நகர் புனித பிரான்சிஸ், இஸ்லாமிய சுல்தானை சந்தித்த 800ம் ஆண்டையும், மகாத்மா காந்தி பிறந்த 150ம் ஆண்டையும் சிறப்பிக்கும்வண்ணம், தெற்கு ஆசிய பிரான்சிஸ்கன் துறவிகள் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள முயற்சிகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

விளிம்புகளில் வாழ்வோரைக் காப்பது, படைப்பின் பாதுகாப்பு மற்றும் சமயங்களிடையே நல்லுறவை வளர்ப்பது ஆகிய இலக்குகளை, தெற்கு ஆசியாவில் பணியாற்றும் பிரான்சிஸ்கன் துறவிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் விருப்பத் தேர்வாக மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 24ம் தேதி முடிய தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட 60க்கும் மேற்பட்ட பிரான்சிஸ்கன் குழுமத் தலைவர்கள் எடுத்த முடிவுகள் குறித்து, அருள்பணி நித்திய சகாயம் அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

சமுதாய அநீதிகள், மிகக்கடுமையான வறுமை, மாண்பை இழக்கும் பெண்கள், உரிமைகளை இழந்த குழந்தைகள், புலம் பெயர்ந்தோர், இயற்கைச் சீரழிவு என்று, பல தளங்களில், தெற்கு ஆசிய நாடுகள் ஒரே விதமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றன என்று இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

பிரான்சிஸ்கன் துறவு சபைகளின் அடிப்படை விழுமியங்களை மனதில் கொண்டு, இக்கூட்டத்தின் இறுதியில் பத்து-புள்ளி செயல்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது என்றும், இன்றைய உலகில் ஓரந்தள்ளப்பட்டவர்களை மையப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பீதேஸ் செய்திக்குறிப்பு கூறுகிறது.

அசிசி நகர் புனித பிரான்சிஸ், இஸ்லாமிய சுல்தானை சந்தித்த 800ம் ஆண்டையும், மகாத்மா காந்தி பிறந்த 150ம் ஆண்டையும் சிறப்பிக்கும்வண்ணம், சமய நல்லுணர்வுகளை வளர்க்கும் விழாக்களை பிரான்சிஸ்கன் துறவுக் குழுமங்கள் திட்டமிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2019, 15:15