கடல் நாள் கடல் நாள் 

"கடல் திருத்தூதுப் பணி - முதல் நூற்றாண்டு நோக்கி"

1920ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கடல் திருத்தூதுப் பணி அமைப்பின் முதல் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவாக, 2020ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், கிளாஸ்கோ நகரில் இத்திருத்தூதுப் பணியின் உலக உச்சி மாநாடு நடைபெறும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடலில் பணியாற்றுவோர் மற்றும் பயணம் செய்வோருக்கென உருவாக்கப்பட்ட திருத்தூதுப் பணிக்குழுவின் நூற்றாண்டு கொண்டாட்டங்களைக் குறித்து, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் விவரங்களை வெளியிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஜூலை 14 கடந்த ஞாயிறன்று கடல் ஞாயிறு சிறப்பிக்கப்பட்டதையடுத்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், இப்பணிக்குழுவின் வரலாறு, மற்றும் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களைக் குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

"கடல் திருத்தூதுப் பணியின் நூற்றாண்டு நோக்கி: இறைவேண்டுதல்களின் ஒரு சுனாமி" என்ற தலைப்பில் கர்தினால் டர்க்சன் அவர்கள் வெளியிட்டுள்ள இக்கட்டுரையில், கடலில் பயணிப்போருக்கென, 19ம் நூற்றாண்டில், புனித வின்சென்ட் தே பவுல் துறவு சபையினர் துவக்கிய மையங்களை, இப்பணியின் ஆரம்பமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஆயரும் அருளாளருமான ஜியோவான்னி பத்திஸ்தா ஸ்கலாபிரினி (Giovanni Battista Scalabrini) அவர்கள், இத்தாலியின் ஜெனோவா துறைமுகத்தில் ஆன்மீகப் பணியாற்ற அருள்பணியாளர்களை அனுப்பியதையும், 1890ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், இந்த ஆன்மீகப் பணியாளர்களுக்கென சிறப்பு செபக்கருத்துக்களை வெளியிட்டதையும், கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

இதற்குப்பின், 1893ம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் இயேசு சபையினர் மேற்கொண்ட கடல் சார்ந்த பணிகள், மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி இஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளை சுட்டிக்காட்டியுள்ளார், கர்தினால் டர்க்சன்.

இந்த முயற்சிகளின் சிகரமாக, 1920ம் ஆண்டு, அக்டோபர் 4ம் தேதி, கடல் திருத்தூதுப் பணி உருவானது என்பதைக் குறிப்பிடும் கர்தினால் டர்க்சன் அவர்கள், இப்பணிக்கு, 'கடலின் விண்மீன்' என்ற பெயரில் ஒரு இலச்சினையும் உருவாக்கப்பட்டது என்பதை, தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடல் பயணங்களில் நம்பிக்கையூட்டும் நங்கூரத்தையும், இறைவேண்டுதலின் மையமாக விளங்கும் இதயத்தையும் அடையாளமாகக் கொண்டு 'கடலின் விண்மீன்' இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது என்பதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

1920ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த திருத்தூதுப் பணி அமைப்பின் முதல் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் பல நிலைகளில் நிகழும் என்றும், அவற்றின் நிறைவாக, 2020ம் ஆண்டு, செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி முடிய, கிளாஸ்கோ நகரில் கடல் திருத்தூதுப் பணியின் உலக உச்சி மாநாடு நடைபெறும் என்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2019, 14:55