புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்ந்தோர் 

புலம்பெயர்ந்தோரின் வாழ்வும், மாண்பும் பாதுகாக்கப்பட...

கடலில் காணாமல்போகும் புலம்பெயர்ந்தோரைத் தேடிப் பாதுகாக்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோர் நுழைவதற்கு, சரியான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

லிபியா நாட்டு கடற்பரப்பில் குறைந்தது 150 புலம்பெயர்ந்தோர் பலியாகியுள்ளவேளை, இக்கடல் பகுதியை கடந்துவரும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வும், மாண்பும் பாதுகாக்கப்பட, உடனடியாகத் தீர்வுகள் காணப்படுமாறு, இயேசு சபையினரின் JRS புலம்பெயர்ந்தோர்ப்பணி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.   

ஜூலை 25, இவ்வியாழனன்று, ஆப்ரிக்கா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 300 புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு சென்ற இரு படகுகள், லிபியக் கடற்கரைக்கு எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் கவிழ்ந்ததில், 150 பேர் வரை கடலில் மூழ்கி இறந்துள்ளனர் எனவும், 134 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

காப்பாற்றப்பட்டுள்ள இம்மக்களை ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அமைப்பு, Tajoura தடுப்புக்காவல் மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்நிகழ்வு, இவ்வாண்டில் மத்தியதரைக் கடல் பகுதியில் இடம்பெற்றுள்ள, கடுந்துயர நிகழ்வு என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த துயர நிகழ்வைத் தொடர்ந்து, உரோம் நகரின் ஆஸ்தாலி இயேசு சபையினர் அமைப்பு உட்பட, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் மத்தியில் பணியாற்றும் பல்வேறு அமைப்புகள், இத்தகைய துயர நிகழ்வுகள் மேலும் இடம்பெறாமல் தடுப்பதற்கு, நடவடிக்கைகளை எடுக்குமாறு, தேசிய நிறுவனங்களுக்கும், உலகளாவிய சமுதாயத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.

லிபியாவில் வன்முறையை எதிர்நோக்கும் புலம்பெயர்ந்தோர், அந்நாட்டிலிருந்து அகற்றப்பட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என, இயேசு சபையினரின் உரோம் அஸ்தாலி அமைப்பின் ஊடகத் தொடர்பாளர், பிரான்செஸ்கா குவோமோ அவர்கள், தேசிய அமைப்புகளையும், ஐரோப்பிய நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2019, 16:11