அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைச் சுவரைக் காக்கும் பணியில் எல்லைப்படை வீரர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைச் சுவரைக் காக்கும் பணியில் எல்லைப்படை வீரர் 

புலம் பெயர்ந்தோரை, குற்றவாளிகளாக நடத்தும் போக்கு

உலகெங்கும் நிகழ்ந்துவரும் புலம்பெயர்தல் என்ற உண்மையின் பின்னணியில், ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அநீதியானச் சூழல்களை அகற்றும் முயற்சியில் அந்தந்த நாட்டு அரசும், பன்னாட்டு அமைப்புக்களும் ஈடுபடவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எல் சால்வதோர் நாட்டிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைய முயலும் மக்கள், அந்நாட்டின் எல்லையில் அடைந்துவரும் துன்பங்கள் மிகுந்த கவலையை அளிக்கின்றன என்று, எல் சால்வதோர் நாட்டு ஆயர்கள், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

சான் சால்வதோர் பேராயர், ஹோஸே லூயிஸ் எஸ்கொபார் ஆலாஸ் (José Luis Escobar Alas) அவர்கள் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த வேளையில், ஆயர்களின் சார்பாக, தன் கவலையை வெளியிட்டதோடு, புலம் பெயர்ந்து செல்வோரை, குற்றவாளிகளைப் போல் நடத்தும் போக்கினை, உலக அரசுகள் தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உலகெங்கும் நிகழ்ந்துவரும் புலம்பெயர்தல் என்ற உண்மையின் பின்னணியில், ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அநீதியானச் சூழல்களை அகற்றும் முயற்சியில் அந்தந்த நாட்டு அரசும், பன்னாட்டு அமைப்புக்களும் ஈடுபடவேண்டும் என்று, பேராயர் எஸ்கொபார் ஆலாஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

எல் சால்வதோர் நாட்டைச் சேர்ந்த இளம் தந்தை ஆஸ்கர் அல்பெர்த்தோ மார்தினேஸ் அவர்களும், அவரது மகள் வலேரியாவும் அமெரிக்கை ஐக்கிய நாட்டை அடையும் முயற்சியில், ரியோ கிராந்தே நதிக்கரையில் பிணங்களாக ஒதுங்கியிருந்தது, உலகின் மனசாட்சியைத் தட்டியெழுப்பியுள்ளது என்று, பேராயர் எஸ்கொபார் ஆலாஸ் அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைப்பாதுகாப்புத் துறை அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அந்நாட்டின் தெற்கு எல்லையில் திரண்டிருக்கும் புலம்பெயர்ந்தோரில், 40 விழுக்காட்டினர், ஹொண்டுராஸ் நாட்டிலிருந்தும், 40 விழுக்காட்டினர் கவுத்தமாலா நாட்டிலிருந்தும், 11 விழுக்காட்டினர், எல் சால்வதோர் நாட்டிலிருந்தும் வந்துள்ளனர் என்று தெரிகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2019, 14:54