கர்தினால் இரபேல் லூயிஸ் சாக்கோ கர்தினால் இரபேல் லூயிஸ் சாக்கோ 

ஈராக்கில் கிறிஸ்தவ புரட்சிக்குழு அவசியமற்றது

ஆயுதக் கட்டுப்பாட்டுக்கும், தேசிய அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், ஈராக் அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு, தலத்திருஅவை முழு ஆதரவை வழங்குகிறது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஈராக்கில் எந்தவித ஆயுதம் தாங்கிய கிறிஸ்தவ புரட்சிக்குழு உருவாக்கப்படுவதற்கு, அந்நாட்டு கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும்தந்தை கர்தினால் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள், தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இளம் கிறிஸ்தவர்கள், ஈராக்கின் அதிகாரப்பூர்வ இராணுவம் அல்லது காவல்துறையில் இணைவதையே திருஅவை விரும்புகின்றது என்றும், கிறிஸ்தவ புரட்சிக் குழு உருவாக்கப்படுவது, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகிய கிறிஸ்தவ உணர்வுகளுக்கு முரணானது என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

ஆயுதக் கட்டுப்பாட்டுக்கும், தேசிய அமைப்புகள் மற்றும், தனித்துவத்தை வலுப்படுத்துவதற்கும், ஈராக் அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு, திருஅவை தனது முழு ஆதரவை வழங்குகிறது என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில், முதல்முறையாக, கிறிஸ்தவ புரட்சிக்குழு உருவாக்கும் முயற்சிக்கு, தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து ஜூலை 25, இவ்வியாழனன்று அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக்கின் இராணுவத்தில் சேருவதற்கு இளையோரை ஊக்கப்படுத்தியுள்ளார்.

அரசியலிலோ, Al-Hashd Al-Shaabi பொதுமக்கள் அமைப்பிலோ ஈடுபடுவதற்கு, தனிநபர்கள் எடுக்கும் தீர்மானங்களை திருஅவை மதிக்கின்றது, ஆனால், கிறிஸ்தவ புரட்சிக்குழு உருவாக்கப்படுவதை எதிர்க்கின்றது என்று, கர்தினாலின் அறிக்கை கூறுகின்றது.

ஈராக்கில், கிறிஸ்தவர்கள் அதிகமாகவுள்ள, மொசூல் மற்றும் நினிவே சமவெளிப் பகுதியை, ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்பிடமிருந்து காப்பாற்றுவதற்கு, கிறிஸ்தவ புரட்சிக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை, கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2019, 14:40