மத்திய கிழக்கு நாடுகளின் நிலை குறித்து உரையாற்றும் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ மத்திய கிழக்கு நாடுகளின் நிலை குறித்து உரையாற்றும் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ 

திருத்தந்தையின் ஈராக் பயணம் காயங்களை ஆற்றும் – கர்தினால் சாக்கோ

ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் மேற்கொண்டுள்ள ஆண்டு தியானத்தில் உரை வழங்கிய கர்தினால் சாக்கோ அவர்கள், ஆயர், மற்றும் அருள்பணியாளர் என்ற நிலைகள், பணிகளே அன்றி, பதவிகள் அல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"இறைவேண்டுதல் இன்றி, ஒருவராலும் இயேசுவின் சீடராக வாழமுடியாது" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய எண்ணத்தை நினைவுறுத்தி, அருள்பணியாளர்கள், தனிப்பட்ட, மற்றும் குழும இறைவேண்டல்களை மேற்கொள்ள வேண்டும் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.

ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் மேற்கொண்டுள்ள ஆண்டு தியானத்தில் உரை வழங்கிய கர்தினால் சாக்கோ அவர்கள், ஆயர், மற்றும் அருள்பணியாளர் என்ற நிலைகள், பணிகளே அன்றி, பதவிகள் அல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.

ஜூலை 8 இத்திங்கள் முதல், 12, இவ்வெள்ளி முடிய, அங்காவா நகரில் நடைபெற்றுவரும் ஆண்டு தியானத்தில், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் சாக்கோ அவர்கள், திருஅவையை வழிநடத்தும் பொறுப்பு, ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதாகவோ, மதிப்பாகவோ கருதப்படாமல், ஓர் அழைப்பாகக் கருதப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அண்மைய ஆண்டுகளில், ஈராக் நாடு அடைந்துள்ள காயங்களின் விளைவாக, கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, அருள்பணியாளரும், தங்கள் சொந்த நலனை மட்டும் கருத்தில் கொண்டு, ஈராக் நாட்டை விட்டு வெளியேறியிருப்பது, வேதனை தரும் வரலாற்று நினைவு என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

வருகிற 2020ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது, இந்நாட்டின் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் அனைத்து காயங்களையும் குணமாக்கும் என்று தான் நம்புவதாக, கர்தினால் சாக்கோ அவர்கள் தன் தியான உரையில் குறிப்பிட்டார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2019, 15:13