புகலிடம் தேடுவோருடன் அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் புகலிடம் தேடுவோருடன் அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் 

புகலிடம் தேடி வந்தவர்களை, கருணையுடன் நடத்துங்கள்

தங்கள் நாடுகளில் நிகழும் கொடுமைகளிலிருந்து தப்பித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள மக்களை வேட்டையாடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், கிறிஸ்தவ விழுமியங்களுக்கு எதிரானவை - கர்தினால் டி'நார்டோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடியேற்றதாரரைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், பல்லாயிரம் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்கும் கொடுமையாக அமைந்துள்ளன என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

சரியான ஆவணங்கள் இன்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ளவர்களை அகற்றும் பணியில், எல்லைப்பாதுகாப்பு, மற்றும் குடியேற்றத் துறைகளைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பதைக் குறித்து, ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் டானியேல் டி'நார்டோ அவர்கள் தன் கவலையை தெரிவித்துள்ளார்.

தங்கள் நாடுகளில் நிகழும் கொடுமைகளிலிருந்து தப்பித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள மக்களை வேட்டையாடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கும், கிறிஸ்தவ விழுமியங்களுக்கும் எதிரானவை என்று, கர்தினால் டி'நார்டோ அவர்க.ளின் அறிக்கை கூறுகிறது.

தங்கள் நாட்டுக்குள் புகலிடம் தேடி வந்தவர்களை, கருணையுடனும், கண்ணியமாகவும் நடத்தும்படி தான் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவருக்கு விண்ணப்பிப்பதாக, கர்தினால் டி'நார்டோ அவர்கள், தன் அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

2019ம் ஆண்டின் புலம் பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செய்தியில், புலம் பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும், நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதன் பொருளை உணர்த்துகின்றனர் என்றும், இந்த அடிப்படை விழுமியத்தை, செல்வம் மிகுந்த நாடுகள் கருத்தில் கொள்வதில்லை என்றும் கூறியுள்ளதை, கர்தினால் டி'நார்டோ அவர்கள், தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். (USCCB)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2019, 14:44