கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் 

பயங்கரவாதத்திற்கு உதவும் ஆயுத விற்பனை நிறுத்தப்பட

இலங்கை உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கர்தினால் இரஞ்சித் - சில மனிதர்கள், அப்பாவி மனிதர்களுக்கு, எவ்வாறு இவ்வளவு தூரம் தீமை செய்ய இயலும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் இவ்வாண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான உண்மைகள், இன்னும் அறியப்படாத சூழலில், நாங்கள் உண்மைக்கு வெகுதொலைவிலேயே உள்ளோம் என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர், கருத்து தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் மட்டகளப்பில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஜூலை 21, வருகிற ஞாயிறன்று மூன்று மாதங்கள் நிறைவுறுவதையொட்டி, ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், கடந்த ஏப்ரல் 21ம் தேதி உயிர்ப்பு ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அளித்த வேதனை போன்று, இதுவரை தான் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது ஆலயங்கள் மீண்டும் திறக்கப்பட்டு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன என்றுரைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், உள்நாட்டு விவகாரங்களைத் தீர்ப்பதில் மும்முரமாகவுள்ள அரசு, இத்தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியுள்ளது என்றும்  குறை கூறினார்.

அதேநேரம், அமெரிக்க ஐக்கிய நாடு, ஐரோப்பிய நாடுகள் போன்ற வெளிநாட்டு சக்திகள், பயங்கரவாதத்திற்குத் துணைநிற்கும் நாடுகளுக்கு ஆயுதங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன எனவும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் கவலை தெரிவித்தார்.

இலங்கையில், பயங்கரவாதத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் இன்னல்கள், இன்னும் முழுமையாக நிவர்த்திசெய்யப்படவில்லை, எனினும், நாடுகள் வழங்கும் உதவிகளால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஆன்மீக மற்றும் உடல்சார்ந்த உதவிகளையும், காயமடைந்தவர்களுக்கு மறுவாழ்வையும் அளித்து வருவதாகத் தெரிவித்தார், கர்தினால் மால்கம் இரஞ்சித்.

கடந்த ஏப்ரல் 21ம் தேதி உயிர்ப்பு ஞாயிறன்று, கொழும்பு உயர்மறைமாவட்டத்தில் இரு கத்தோலிக்க ஆலயங்கள், மட்டக்களப்பில் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை ஆலயம்,  கொழும்புவில் மூன்று நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 258 பேர் உயிரிழந்தனர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2019, 15:01