14வது உலக இளையோர் கருத்தரங்கு 14வது உலக இளையோர் கருத்தரங்கு  

கிறிஸ்துவின் உண்மையான மறைப்பணியாளர்களாக செயல்படுங்கள்

ஜூலை 21, இஞ்ஞாயிறன்று, கேரளாவின் Muringoor விண்ணக தியான மையத்தில் தொடங்கியுள்ள 14வது உலக இளையோர் கருத்தரங்கு, ஜூலை 26, வருகிற வெள்ளியன்று நிறைவடையும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கேரளாவில், ஜூலை 21, இஞ்ஞாயிறன்று, 14வது உலக இளையோர் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, மும்பை பேராயரும், இந்திய ஆயர் பேரவைத் தலைவருமான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், கிறிஸ்துவின் உண்மையான மறைப்பணியாளர்களாகச் செயல்படுமாறு, இளையோரைக் கேட்டுக்கொண்டார்.

திருமுழுக்குப் பெற்றுள்ள எல்லாரும், உலகையும், உறவுகளையும் நல்வழியில் மாற்றுவதற்கு, இயேசுவோடு நல்லுறவை உருவாக்கி, அவரின் சீடர்களாக மாற வேண்டும், இதன் வழியாக, அனைவரும் உண்மையான மறைப்பணியாளர்களாகச் செயலாற்ற இயலும் என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

இல்லத்திலும், சமுதாயத்திலும், பணியிலும் உண்மையான மறைப்பணியாளர்களாக மாறுமாறும் வலியுறுத்திய கர்தினால் கிரேசியஸ் அவர்கள்,  நம் கவலைகளையும், ஏக்கங்களையும் ஆண்டவரிடம் சமர்ப்பிக்கும் தருணம், இயேசுவோடு நாம் உரையாடும் நேரம் என்றும் தெரிவித்தார்.

வத்திக்கானில் நடைபெற்ற, இளையோர் ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்ட பல நாடுகளின் கத்தோலிக்க இளையோர், தாங்கள் சொல்வதைக் கேட்டு, தங்கள் மீது நம்பிக்கை வைத்து, உடன்பயணிக்க வேண்டுமென்று, ஆயர்களைக் கேட்டுக்கொண்டனர் என்பதையும் நினைவுபடுத்தினார், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

இக்கருத்தரங்கை, மறையுரையாளர் அருள்பணி அகுஸ்தீன் வல்லூரன் அவர்கள் நடத்துகிறார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2019, 14:23