Eid al-Fitr விழாவன்று பாக்தாதில் சுன்னிப் பிரிவு முஸ்லிம்கள் Eid al-Fitr விழாவன்று பாக்தாதில் சுன்னிப் பிரிவு முஸ்லிம்கள் 

ஈராக் முதுபெரும் தந்தையின் Eid al-Fitr திருவிழா வாழ்த்து

ஈராக்கிற்கு வெளியிலிருந்து தூண்டப்படும் வெறுப்புணர்வுகளுக்கு இடம் தருவதற்கு பதில், அமைதியை உருவாக்கும் சக்தி நம்மிடமே உள்ளது என்பதை நம்பி, நாம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் - கர்தினால் சாக்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்மைச் சூழ்ந்துள்ள இருளிலிருந்து ஒன்றாக வெளியேறி, ஒருவரையொருவர் மன்னிக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று, ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், இஸ்லாமியருக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

இஸ்லாமியர் சிறப்பிக்கும் Eid al-Fitr திருவிழாவையொட்டி, கர்தினால் சாக்கோ அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அண்மைய ஆண்டுகளாக, கொலைகளையும், அழிவுகளையும் அவற்றின் விளைவாக புலம்பெயர்தலையும் சந்தித்து வரும் ஈராக் மக்களுக்கு, உடன்பிறந்த உணர்வுடன், அமைதியில் வாழ்வது மட்டுமே தலை சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

ஈராக் நாடு, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களைக் கொண்டுள்ள நாடு என்பதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், நமது பாரம்பரியங்களை மதித்து, ஏற்றுக்கொள்வது, இரு மதத்தவருக்கும் முன்னிருக்கும் முக்கிய கடமை என்று எடுத்துரைத்தார்.

ஈராக் நாட்டிற்கு வெளியில் உள்ள அரசுகளும், அமைப்புக்களும், தூண்டிவரும் வெறுப்புணர்வுகளுக்கு இடம் தருவதற்கு பதில், நம் மத்தியில் அமைதியை உருவாக்கும் சக்தி நம்மிடமே உள்ளது என்பதை நம்பி, நாம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, கர்தினால் சாக்கோ அவர்களின் செய்தி அழைப்பு விடுக்கிறது.

அல்-அசார் இஸ்லாமிய தலைவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இணைந்து, இவ்வாண்டு பிப்ரவரி 4ம் தேதி, அபு தாபியில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைக் குறித்து, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக் நாட்டிற்கு, மற்றுமொரு போரைத் தாங்கும் சக்தி கிடையாது என்று எடுத்துரைத்துள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2019, 15:15