பீனிக்ஸ் நகரில் தீக்கிரையான புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம் பீனிக்ஸ் நகரில் தீக்கிரையான புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம் 

தீக்கிரையான புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம்

மே 1ம் தேதி, புனித யோசேப்பு திருநாளன்று, பீனிக்ஸின் வடபகுதியில் அமைந்துள்ள புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம் தீயில் எரிந்து விழுந்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 1ம் தேதி, இப்புதனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரிசோனா மாநிலத்தின் தலைநகர் பீனிக்ஸின் வடபகுதியில் அமைந்துள்ள புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம் தீயில் எரிந்து விழுந்தது.

இப்புதன் அதிகாலையில் இந்த தீ ஆரம்பமாகியிருக்கலாம் என்றும், காலை 6 மணிக்கு தீ அணைக்கப்பட்டது என்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

புனித யோசேப்பு ஆலயத்தை இழந்துள்ள அதே வேளையில், இந்த தீயை அணைக்கப் போராடிய வீரர்களுக்காக நன்றி கூறுகிறோம் என்று, பீனிக்ஸ் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

இந்த தீவிபத்தின் காரணங்களை தீயணைப்புத் துறை ஆய்வு செய்து வருகிறது என்று கூறியுள்ள பீனிக்ஸ் மறைமாவட்டம், இந்த விபத்து, தொழிலாளரான புனித யோசேப்பு திருநாளில் நிகழ்ந்தது மேலும் வேதனையைத் தருகிறது என்று கூறியுள்ளது.

ஒவ்வொரு கோவிலும் அங்கு வாழும் சமுதாயத்தின் நம்பிக்கையாக விளங்குகிறது என்றும், இக்கோவிலை காப்பாற்ற இயலாமல் போனது மிகவும் வேதனை தருகிறது என்றும், தீயணைப்பு படையின் தலைவர் Danny Gile அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

1969ம் ஆண்டு, ஆகஸ்ட் 18ம் தேதி கட்டி முடிக்கப்பட்ட புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம், வருகிற ஆகஸ்ட் மாதம் தன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஏற்பாடுகள் நிகழ்ந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2019, 15:07