கிறிஸ்து அரசர் கண்ணாடி ஓவியம் கிறிஸ்து அரசர் கண்ணாடி ஓவியம் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: மத்தியகால கிறிஸ்தவ கலைகள்– பகுதி 2

தொமினிக்கன் துறவி புவே நகரின் வின்சென்ட் அவர்கள், “பெரிய கண்ணாடி (Speculum majus)” என்ற பெயரில் எழுதிய கலைக்களஞ்சியம், 18ம் நூற்றாண்டுவரை, மாபெரும் ஐரோப்பிய கலைக்களஞ்சியமாக கருதப்பட்டது.

மேரி தெரேசா - வத்திக்கான்

மத்திய காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் ஒரே மதமாக கிறிஸ்தவமும், ஒரே மொழியாக இலத்தீனும் செல்வாக்காக இருந்து வந்தன. அக்காலத்தில் ஐரோப்பாவில் கல்வி வளர்ச்சிக்கும், ஓவியங்கள், சிற்பங்கள் என கலைகள் வளர்ச்சிக்கும் கிறிஸ்தவம் அதிகமாக பங்காற்றியுள்ளது. அதே காலகட்டத்தில் இத்தாலியில் புகழ்பெற்ற கவிஞர் தாந்தே அல்கியெரி (Dante Alighieri) அவர்களும், இங்கிலாந்தில் கப்புச்சின் துறவி ரோஜர் பேகன் (Roger Bacon OFM) அவர்களும், பிரான்ஸ் நாட்டில், தொமினிக்கன் துறவி புவே நகரின் வின்சென்ட் (Vincent of Beauvais) அவர்களும் மாபெரும் மேதைகளாக விளங்கினர்.

புவே நகரின் வின்சென்ட் அவர்கள், 1180 அல்லது 1190ம் ஆண்டில் புவே (Beauvais) நகரில் பிறந்தவராய்ச் சொல்லப்படுகிறார். ப்ரெஞ்ச் நாட்டு வல்லுனரான இவர், “பெரிய கண்ணாடி (Speculum majus)” என்ற பெயரில் எழுதிய கலைக்களஞ்சியம், 18ம் நூற்றாண்டுவரை, மாபெரும் ஐரோப்பிய கலைக்களஞ்சியமாக கருதப்பட்டது. இவர், பாரிசில், 1220ம் ஆண்டில் தொமினிக்கன் சபையில் சேர்ந்து அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இறையியலில் வல்லுனராகவும் விளங்கிய வின்சென்ட் அவர்கள், உலகளாவிய அறிவைத் தொகுத்து வகைப்படுத்தும் திட்டத்தில், 1244ம் ஆண்டுவரை செலவழித்தார். Royaumont சிஸ்டர்சியன் துறவு ஆதீனத்தின் தலைவராகப் பணியாற்றிய Radulphus அவர்கள் வழியாக, ப்ரெஞ்ச் அரசர் 9ம் லூயி அவர்களுடன் வின்சென்ட் அவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது. வின்சென்ட் அவர்கள் அப்போதுதான் எழுதி முடித்திருந்த இறையியல் தொகுப்பு பற்றி, Radulphus அவர்கள் அரசருக்குத் தெரிவித்தார். அதன் பயனாக, வின்சென்ட் அவர்கள் எழுதியிருந்த கலைக்களஞ்சியத்தின் வரலாற்றுப் பிரிவின் நகலின் பதிவுக்கு அரசர் பொறுப்பேற்றார். இவ்வாறுதான், இவர் எழுதிய மாபெரும் Speculum Maius கலைக்களஞ்சியம் பொதுவில் தெரிய வந்தது.

வின்சென்ட் தெ புவே அவர்கள், ஏறக்குறைய 1250ம் ஆண்டில், ப்ரெஞ்ச் அரசர் 9ம் லூயிஸ் அவர்களின் அரசவையில், ஆன்மீக அருள்பணியாளராகவும், இறையியல் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். அந்தப் பணியின்போது, 1260ம் ஆண்டுக்கும், 1261ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், “பிரபுக்கள் பிள்ளைகளின் கல்வி (De eruditione filiorum nobilium)” என்ற தலைப்பில், மிகவும் நல்தாக்கத்தை ஏற்படுத்திய கல்வி பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதினார். இவர் எழுதிய Speculum majus என்ற கலைக்களஞ்சியம், வரலாறு, இயற்கை, கோட்பாடு ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தது. ஆனால், அதிலுள்ள “நன்னெறிகளின் கண்ணாடி (Speculum morale Mirror of Morals)” என்ற நான்காவது பகுதி, பெயர் அறியப்படாத எழுத்தாளர் ஒருவரால், பதினான்காம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது.

வின்சென்ட் அவர்கள் தொகுத்து எழுதியுள்ள கலைக்களஞ்சியத்தில், இறைவனின் படைப்பு முதல் அரசர் 9ம் லூயிஸ் அவர்களின் காலம் வரையுள்ள மேற்கத்திய மனித வரலாறு, மேற்கில் அறியப்பட்ட, தாவரங்கள், விலங்குங்கள், காளான் வகைகள் என, அனைத்தின் வரலாறு மற்றும் அறிவியல் ஆகிய அனைத்தும் உள்ளடங்கியுள்ளன. மேலும், ஐரோப்பிய இலக்கியம், சட்டம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்தும் அதில் உள்ளன. கிரேக்க மற்றும் உரோமைய அறிஞர்கள் பற்றி, குறிப்பாக, கிரேக்க மெய்யியல் அறிஞர் அரிஸ்டாட்டில், உரோம் மெய்யியல் அறிஞர் சிசரோ, கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ் ஆகியோரின் தத்துவங்கள் பற்றி, தெள்ளத்தெளிவாக  இவர் கற்றுத் தேர்ந்திருப்பதை, இவரது கலைக்களஞ்சியத்தில் காண முடிகின்றது. 12ம் நூற்றாண்டில், இடம்பெற்ற கற்றல் பற்றிய மறுமலர்ச்சிக்குப் பின்னர், பழமை மீது இருந்த வெறுப்பு மறைந்துபோனதற்கு, வின்சென்ட் அவர்களின் கலைக்களஞ்சியம் ஒரு சான்றாக உள்ளது.

ஒரேயொரு வல்லுனரின் மிகப்பெரிய திட்டத்தில், எண்பது நூல்கள் உட்பட மூன்று பகுதிகளாக, இறுதி தொகுப்பு அமைந்துள்ளது, அனைவருக்கும் வியப்பை அளித்துள்ளது. வின்சென்ட் தெ புவே அவர்களின் அறிவை உலகினர் வியந்து பார்க்கின்றனர். ப்ரெஞ்ச் அரசர்கள் 8ம் லூயிஸ் மற்றும் 9ம் லூயிஸ் ஆட்சி காலம் பற்றி, 1223ம் ஆண்டுக்கும், 1250ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் எழுதிய நூல்களை, பிற்காலத்தில் பலர் பயன்படுத்தினாலும், தொன்மைகால மற்றும் மத்தியகால எழுத்தாளர்களிடமிருந்து குறிப்புக்களை, தான் எடுத்துக்கொண்டதாகச் சொல்லி, தனது படைப்புகள், தனது சொந்த அறிவால் வெளிவந்தவை அல்ல என, வின்சென்ட் அவர்கள் தெரிவித்துள்ளார். இவரின் நூல்கள் அனைத்தும், 13ம் நூற்றாண்டில், அறிவுக்களஞ்சியமாகப் போற்றப்பட்டு வந்தன. இவை இவரின் காலத்தில், குறிப்பாக, ஆங்கில கவிஞர் Geoffrey Chaucer அவர்களில், மிக அதிகஅளவில் செல்வாக்குப் பெற்றிருந்தன மற்றும், நல்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. வின்சென்ட் தெ புவே அவர்களின் நூல்கள், 1328ம் ஆண்டில் ப்ரெஞ்ச் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பாரிசில், 1495 மற்றும், 1496ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அச்சிடப்பட்டன. இத்தாலிய மறுமலர்ச்சி கால, மனிதர் பற்றிய மெய்யியல் மற்றும் நன்னெறி வல்லுனர்கள் மத்தியில் வின்சென்ட் தெ புவே அவர்கள் நன்கு அறியப்பட்டிருந்தார். இவர் தனது கடைசி காலங்களில் எங்கு வாழ்ந்தார் என்பது தெரியவில்லை. மத்தியகால தொமினிக்கன் துறவியும், மெய்யியல் மற்றும் இறையியல் வல்லுனருமாகிய இவர், 1264ம் ஆண்டில் பாரிசில் காலமானார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2019, 15:54