இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் 

மனித வர்த்தகத்தை ஒழிக்கும் கூட்டத்தில் கர்தினால் நிக்கோல்ஸ்

வத்திக்கான் கூட்டத்தில், மனித வர்த்தகம், உடல் உறுப்புக்களின் விற்பனை ஆகிய பிரச்சனைகள் பேசப்பட்டன - கர்தினால் நிக்கோல்ஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித வர்த்தகம் என்ற பிரச்சனையை அடையாளம் காணுதல், அதைத் தடுத்தல், மற்றும் அவற்றில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் கொணர்தல் ஆகியவை, வத்திக்கானில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என்று, இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர் பிரிவு, மனித வர்த்தகத்தை ஒழிக்கும் வழிகளை ஆய்வு செய்வதற்கு, வத்திக்கானில் நடத்தி வரும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்கும் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.

உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் 200க்கும் அதிகமான ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில், மனித வர்த்தகம், உடல் உறுப்புக்களின் விற்பனை ஆகிய பிரச்சனைகள் பேசப்படுவதாக, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

வலுவிழந்தோருக்கு உதவிகள் செய்வதற்கென இங்கிலாந்திலும், இன்னும் உலகின் ஏனைய நாடுகளிலும் பணியாற்றிவரும் சாந்தா மார்த்தா என்ற பணிக்குழுவின் உலகத் தலைவரான கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள மனிதாபிமான அமைப்புக்களுடன் கலந்து பேசுவது பல தெளிவுகளைத் தந்துள்ளது என்று கூறினார்.

மனித வர்த்தகத்தை மையப்படுத்தி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இவ்வியாழன் மதியம், 12 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவுரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2019, 15:02